மத்திய அரசைக் கண்டித்து புதுக்கோட்டையில் திமுக கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை, 15 மார்ச் (ஹி.ச.) தமிழகத்திற்குப் போதிய நிதி ஒதுக்காதது மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து,புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை
D


புதுக்கோட்டை, 15 மார்ச் (ஹி.ச.)

தமிழகத்திற்குப் போதிய நிதி ஒதுக்காதது மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து,புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்குச் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்திற்குத் திட்டங்களும் இல்லை.

அடுப்பு எரிக்க எரிவாயு சிலிண்டரும் இல்லை என மத்திய அரசுக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்தப் போராட்டத்தில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் செல்லப்பாண்டியன், நகரச் செயலாளர் ராஜேஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும், காங்கிரஸ், தேமுதிக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மாவட்டத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மேடையில் உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

குறிப்பாக, கையில் எரிவாயு சிலிண்டர் படங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்தி ஏராளமான பெண்கள் மத்திய அரசுக்கு எதிராகத் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர்.

Hindusthan Samachar / Durai.J