Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 மார்ச் (ஹி.ச)
தமிழகத்தில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து அடுத்தகட்ட ஆயத்தப் பணிகள் குறித்து ஆலோசிக்க கடந்த வாரம் சத்தியமூர்த்தி பவனில் முக்கியக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பின்னர் மூத்த தலைவர்கள் காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் பட்டியலை கிரிஷ் சோடங்கரிடம் வழங்கினர்.
அந்த பட்டியலை எடுத்துக்கொண்டு டெல்லி சென்ற கிரிஷ் சோடங்கர், ராகுல் காந்தியிடம் பட்டியலை ஒப்படைத்தார். பட்டியல் தொடர்பாக ஆலோசனை நடத்திய ராகுல் காந்தி சில முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்.
இப்படியான ஒரு பரபரப்பான சூழலில்தான், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் இன்று சென்னை வருகிறார்.
ராகுல் காந்தி வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில், காங்கிரஸ் கட்சி விரும்பும் தொகுதிகளைக் கேட்டுப் பெற்று, தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை கிரிஷ் சோடங்கர் இன்று இறுதி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது.
அதன்படி தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க மாநில தேர்தல் குழு, தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b