பாஜக அழுத்தங்களுக்கு விஜய் இணங்க மாட்டார் என நம்புகிறேன் - திருமாவளவன்
சென்னை, 15 மார்ச் (ஹி.ச.) எரிவாயு தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க தவறி விட்டதாக குற்றம்சாட்டி சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற திமுக கூட்டணி கட்சியினரின் ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமை
Thiruma


சென்னை, 15 மார்ச் (ஹி.ச.)

எரிவாயு தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க தவறி விட்டதாக குற்றம்சாட்டி சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற திமுக கூட்டணி கட்சியினரின் ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார் .

இந்நிகழ்வில், அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து திருமாவளவன் பேசியதாவது,

எரிவாயு தட்டுப்பாடு தொடர்பாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தான் பதட்டத்தை உருவாக்குவதாக அண்ணாமலை கூறியதாக கேட்கிறீர்கள்.

இந்தியா மட்டுமில்லை உலகநாடுகள் முழுவதும் இந்த பதற்ற நிலை உள்ளது.

அண்ணாமலை அறியாமல் பேசுகிறார் என்றுதான் அர்த்தம். நாங்கள் அரசியல் செயயவில்லை. அண்ணாமலைதான் அரசியல் செய்கிறார் .

திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளிடையே பேச்சுவார்த்தை சுமூகமாக நடக்கிறது .

அதிமுக - பாஜக இன்னும் பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை. 2021 கூட்டணியையே அவர்களால் தக்க வைக்க முடியவில்லை.

அதிமுக பாஜக , விஜயை தங்கள் கூட்டணியில் இணைக்க முயற்சிப்பதாக செய்திகள் வருகின்றன.

விஜய்க்கு அழுத்தம் கொடுத்து அடிபணிய வைக்க முயற்சிகள் நடப்பதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.

நண்பர் விஜய் பாஜகவிற்கு அடிபணிந்தால் அவருடைய அரசியல் எதிர்காலம் சூனியமாகி விடும்.

பிற மாநிலங்களில் பாஜக , சங் பரிவார் நய வஞ்சகமாக கூட்டணி கட்சிகளை வளைப்பது,போன்ற யுத்தியை கையாள்வர்,அதை தமிழகத்திலும் செய்ய பார்க்கின்றனர்.

நண்பர் விஜய் அதற்கு இணங்க மாட்டார் , தனது எதிர்காலத்தை சூனியமாக்கி கொள்ள மாட்டார் என நான் நம்புகிறேன்.

இடதுசாரிகள் கூடுதல் தொகுதிக்கள் கேட்டதாக கூறுகிறீர்கள்,

கூட்டணி பேச்சுவார்த்தையின்போது கூட்டணி கட்சிகள் இடையே மாறுபட்ட, முரண்பட்ட கருத்துகள் வருவது

இயல்பு தான் .

ஆனாலும் இறுதியில் சுமூக தீர்வு காண்போம். இடதுசாரிகளின் கருத்துக்கால் கூட்டணியில் எந்த பாதிப்பும் ஏற்படாது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என இரண்டொரு நாளில் தெரிந்து விடும். என்றார்.

திருமாவளவன் மேடையில் பேசிய போது,

அண்ணன் ஸ்டாலின் அறிவிப்பை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது .

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததற்காக மகிழ்ச்சி , நன்றி தெரிவித்து கொள்கிறேன்

எரிவாயு பிரச்சனைக்காக இந்தியாவில் முதலில் போராட்டம் அறிவித்த தலைவர் அண்ணன் ஸ்டாலின் தான்.

எரிவாயு பிரச்சனை குறித்து பிரதமரை கேட்காமல் பாமக தலைவர் அன்புமணி முதலமைச்சரை பார்த்து கேட்பது ஏன் என இங்கு பேசியவர்கள் கேட்டனர்

இந்த கேள்விக்கான பதிலாக முதலமைச்சர் எப்படி எதிர்வினையாற்றி இருக்கிறார் என்பது இன்று உறுதியாகியுள்ளது.

முதலமைச்சர் பிரதமரை குற்றம்சாட்டி அமைதியாகிவிடாமல் தன்னால் இயன்றதை செய்யும் விதமாக உணவகங்களுக்கு மின் அடுப்பு மின்சார கட்டணத்திற்கு தளர்வு வழங்கியுள்ளார்.

இந்தியாவில் வேறு எந்த மாநில முதலமைச்சரும் இப்படி சிந்தித்தது உண்டா...?

இஸ்ரேல் மதவெறி பிடித்த

நாடு, அவர்கள் நாட்டில் எண்ணெய் வளம் இல்லை, எரிவாயு உற்பத்தி இல்லை வளைகுடாவை நம்பியே இஸ்ரேல் உள்ளது.

ஈரானும் , ஈராக்கும் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் துணிச்சல் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

முதல்நாள் வரை பேச்சுவார்த்தை நடத்திவிட்டு மறுநாள் தாக்குகின்றனர்.

ரஷ்யா ,ஈரான் நாடுகளிடம் இருந்து நாம் கச்சா எண்ணெய் வாங்குகிறோம்.

டிரம்ப் மோடிக்கு ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க கூடாது என கட்டளை யிட்டார். மோடி வாய் திறக்கவில்லை , இறையாண்மை யை பாதுகாக்கும் துணிச்சல மோடிக்கு இல்லை.

காமெனிக்கு இருக்கும் துணிச்சல் மோடிக்கு இல்லை.

இந்தியாவும் ஒரு வல்லரசு தான்,அதற்காகவே போராடுகிறோம் என கூறிவிட்டு மோடி டிரம்ப்பிடம் தலைவணங்கி அடிபணிந்தது ஏன். இது நமக்கு ஒரு சாபக்கேடு.

ஈரானை விட நாம் பல வளங்களை பெற்றுள்ளோம். ஆனால் மோடி அமெரிக்காவை எதிர்த்து பேசும் துணிச்சல் இல்லாமல் இருக்கிறார்.

அவரை குறைத்து மதிப்பிட இதை நான் கூறவில்லை, இதுதான் எதார்த்தமான உண்மை.

நாடாளுமன்றத்தில் ஏன் இதுகுறித்து பேச மறுக்கின்றனர்,ஏவுகணையை வீசி விடுவார்கள் என்ற பயமா..?

அறிவாலயத்தின் மீது ஏவுகணை வீசப்பட்டாலும் அதை எதிர்கொள்ள ஸ்டாலின் தயராக இருக்கிறார்.

யூதர்கள் அமெரிக்காவின் செனட் உள்ளிட்ட ஆட்சிப் பீடத்தில் இருந்து அதிகாரம் செலுத்துகின்றனர் , பெயரளவில் அமெரிக்கா கிறித்தவ நாடு என்று சொன்னாலும் அது யூதர்களுக்காக இயங்கும் நாடு தான்.

டிரம்ப் மருமகன் ஒரு யூதர். இஸ்ரேல் தாக்கும்போதெல்லாம் அமெரிக்கா தலையீடு செய்கிறது.

ஈழ யுத்தத்தின்போது அமெரிக்காவோ , ஐநா வோ தலையீடு செய்யவில்லை , இஸ்ரேல் தாக்கப்பட்டால் மட்டும் தலையீடு செய்கின்றன.

ரஷ்யாவும் சீனாவும் காமேனி படுகொலையை கண்டித்துள்ளது

ஈரான், அமெரிக்க தளங்களை மட்டுமே குறிவைத்து திருப்பி தாக்குகிறது.

உலகப்போர் மூளும் அச்சம் எழுந்துள்ளது,

ஈரான் மீதான ஏவுகணை தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ