மத்திய அரசைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி, 15 மார்ச் (ஹி.ச.) சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீட்டைத் மத்திய அரசு தொடர்ந்து புறக்கணிப்பதைக் கண்டித்து, தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே ''மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி'' கட்ச
மத்திய அரசைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடி, 15 மார்ச் (ஹி.ச.)

சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீட்டைத் மத்திய அரசு தொடர்ந்து புறக்கணிப்பதைக் கண்டித்து, தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே 'மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி' கட்சிகளின் சார்பில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

வடக்கு மாவட்ட திமுக செயலாளரான மகளிர் நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகிக்க, மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன் வரவேற்புரையாற்றினார்.

மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:

ஒன்றிய அரசு கல்வி நிதி, 100 நாள் வேலைத்திட்ட நிதி எனத் தமிழகத்திற்கான அனைத்து நிதி ஆதாரங்களையும் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. கேஸ் சிலிண்டருக்கு மானியம் வழங்குகிறோம் என்று கூறிவிட்டு, விலையை ஏற்றியதுடன் இப்போது சிலிண்டரே கிடைக்காத நிலையை உருவாக்கியுள்ளது. சென்னையில் இருப்பவர்கள் போன் செய்து தூத்துக்குடியிலிருந்து மண் அடுப்பு வாங்கி அனுப்புங்கள் என்று கேட்கும் அளவிற்கு நிலைமை மோசமாகியுள்ளது.

ரஷ்யாவோடு ஒப்பந்தம் இருந்தவரை அனைத்தும் சீராக இருந்தது. ஆனால், அமெரிக்காவிடம் ஒப்பந்தம் போட்ட பின் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு மக்கள் பரிதவிக்கும் நிலை உருவாகியுள்ளது. தேர்தலை மனதில் வைத்துக்கூடத் தமிழகத்திற்கு எந்த நிதியையும் ஒதுக்காத ஒன்றிய அரசுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.

தமிழகத்தின் உரிமைகளை விட்டுக்கொடுத்த அதிமுக மற்றும் தமிழகத்தைப் புறக்கணிக்கும் பாஜக ஆகிய இரு கட்சிகளையும் வீழ்த்த மதச்சார்பற்ற கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் வடக்கு, மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், மாநில நிர்வாகிகள் புளோரன்ஸ், அன்பழகன், துணை மேயர் ஜெனிட்டா, மாநகர திமுக துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மதிமுக, திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மநீம, சமத்துவ மக்கள் கழகம், எஸ்டிபிஐ, ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கூட்டணிக் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / vidya.b