விஜய் தனித்து நிற்கவில்லை, தனித்து விடப்பட்டார் - சீமான்
காரைக்குடி, 15 மார்ச் (ஹி.ச.) 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே அறிவித்துள்ளார். அவர் இத்தேர்தலில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதிய
விஜய் தனித்து நிற்கவில்லை, தனித்து விடப்பட்டார் - சீமான்


காரைக்குடி, 15 மார்ச் (ஹி.ச.)

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

அவர் இத்தேர்தலில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.

இதனைத் தொடர்ந்து இன்று தேவகோட்டை பெரிய கடை வீதி பள்ளிவாசலுக்கு வருகை தந்த சீமான், ஜமாத்தார் கமிட்டியினரை சந்தித்து நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு திரட்டி பேசினார்.

பின்னர்,காரைக்குடி அருகே அரியக்குடியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது,

நாட்டில் காங்கிரஸ் கட்சி வெளியுறவு கொள்கையும் பாஜக வெளியுறவு கொள்கையும் ஒன்றுதான்.

காரைக்குடியில் ஒரே சமூக மக்கள் குவிந்து வாழவில்லை, எல்லா தமிழ் சமூக மக்களும் வாழ்கிறார்கள்.

2024 தேர்தலில் அதிகமான வாக்குகளை பதிவு பெற்ற தொகுதிகளில் காரைக்குடியும் ஒன்று. அதனால்தான் சொந்த மண்ணில் நிற்போம் என்று முடிவு செய்து நிற்கிறேன்.

இலவசம் என்பது வளர்ச்சி கிடையாது, இது வீழ்ச்சியான கவர்ச்சி திட்டம்.

இலவச அறிவிப்பு மூலம் பொறுப்பற்ற சமூகத்தை உருவாக்குகிறார்கள்.போர் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வளைகுடா நாடுகளில் போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு தேர்தலை நடத்த வேண்டும்.

தங்கை காளியம்மாள் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும், வாழ்த்துக்கள். அதிமுகவில் இருந்தவர் மீண்டும் அங்கு சென்றுள்ளார். மிரட்டல் உருட்டலுக்கு பயந்து அரசியலுக்கு வரக்கூடாது. சிறையில் தான் போட முடியும், தூக்கில் போட முடியாது.

தமிழகத்தில் ஆட்சி முறை மாற வேண்டும், கூட்டத்தோடு நிற்பதற்கு வீரம் தேவையில்லை. தனித்து நிற்பதற்கு தான் வீரமும் துணிவும் தேவை. நாங்கள் வீரர்கள் தனித்து நிற்கிறோம். மக்கள்தான் தொடரட்டும் எனக் கூற வேண்டும். நம்பிக்கை இல்லாததால் திமுக, அதிமுக கூட்டணி அமைக்கிறார்கள்.

நேர்மையாக நின்று தேர்தலில் தோற்றாலும் அதுவும் வெற்றி தான். அண்ணனை தம்பி பின்பற்றுவதில் தவறில்லை, சரியாக பின்பற்ற வேண்டும். விஜய் தனித்து நிற்கவில்லை. ஆட்சியில் பங்கு தருகிறோம் என எல்லோரையும் அழைத்துப் பார்த்தார். யாரும் வராததால் தனித்து விடப்பட்டார், அதனால் தனித்து நிற்கிறார்.

நாங்கள் கட்சி ஆரம்பித்த போதே தேசிய கட்சிகளோடும், திராவிட கட்சிகளோடு கூட்டு இல்லையென அறிவித்தோம், இன்றுவரை அப்படியே இருக்கிறோம். நாங்க யார் கிட்டயாவது பேசினோமா? எங்களுக்கு பேசாத பேரமா? எவ்வளவு கோடிகள், எத்தனை பதவிகள் பேசினார்கள்... ஆனால் நான் சென்றேனா? என் தத்துவம் தனித்துவமானது அதனால் தனித்து நிற்கிறேன்... எங்களோடு சேர்த்து தவெகவை ஒப்பிடாதீர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b