Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 18 மார்ச் (ஹி.ச.)
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்டம் நடைபெற்று வரும் நிலையில், மக்களவையின் அலுவல் நாட்களில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மார்ச் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த அவை நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்குப் பதிலாக மார்ச் 28 மற்றும் 29 தேதிகள் அதாவது வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுகிழமை அவை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு மார்ச் மாதத்தில் தொடர் பொது விடுமுறைகள் வருவதால், நாடாளுமன்றத்தின் வேலை நாட்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனைச் ஈடுகட்டும் வகையில் வகையில் ரத்து செய்யப்பட்ட நாட்களுக்குப் பதிலாக, மார்ச் 28 (சனிக்கிழமை) மற்றும் மார்ச் 29 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களும் மக்களவை இயங்கும்.
நிலுவையில் உள்ள முக்கியமான மசோதாக்களை விவாதித்து நிறைவேற்றுவதற்காக இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு அமைச்சகங்களின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களை முடிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
தொடர் முடக்கங்களால் ஏற்பட்ட கால விரயத்தை ஈடுகட்ட வார இறுதி நாட்களில் அவையை நடத்த அரசு விடுத்த கோரிக்கைக்கு, எதிர்க்கட்சித் தரப்பிலும் ஓரளவு இணக்கம் காணப்பட்டுள்ளது. சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஏப்ரல் 2-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், இந்த வார இறுதி அமர்வுகள் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகின்றன.
Hindusthan Samachar / GOKILA arumugam