வாட்ஸ்அப் லிங்க் மூலம் நேரடியாக உரையாட உதவும் புதிய 'கெஸ்ட் சாட்' வசதி அறிமுகம்!
சென்னை, 19 மார்ச் (ஹி.ச.) வாட்ஸ்அப் அக்கவுண்ட் இல்லாவிட்டாலும் இனி கவலையில்லை. லிங்க் மூலம் நேரடியாக உரையாட உதவும் புதிய ''கெஸ்ட் சாட்'' வசதியை வாட்ஸ்அப் பரிசோதனை செய்து வருகிறது. வாட்ஸ்அப் உபயோகிக்காத நண்பர்களுடன் பேச வேண்டுமென்றால், அவர்களை ஆ
வாட்ஸ்அப் லிங்க் மூலம் நேரடியாக உரையாட உதவும் புதிய 'கெஸ்ட் சாட்' வசதி அறிமுகம்!


சென்னை, 19 மார்ச் (ஹி.ச.)

வாட்ஸ்அப் அக்கவுண்ட் இல்லாவிட்டாலும் இனி கவலையில்லை. லிங்க் மூலம் நேரடியாக உரையாட உதவும் புதிய 'கெஸ்ட் சாட்' வசதியை வாட்ஸ்அப் பரிசோதனை செய்து வருகிறது.

வாட்ஸ்அப் உபயோகிக்காத நண்பர்களுடன் பேச வேண்டுமென்றால், அவர்களை ஆப் நிறுவ சொல்லிக் கட்டாயப்படுத்தும் காலம் முடியப்போகிறது. வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது 'கெஸ்ட் சாட்' (Guest Chat) என்ற வசதியை பரிசோதித்து வருகிறது. இதன் மூலம் கணக்கு இல்லாதவர்களுடனும் நீங்கள் இனி ஜாலியாகப் பேசலாம்.

இது எப்படி வேலை செய்கிறது?:

வாட்ஸ்அப் அக்கவுண்ட் இல்லாத ஒருவருடன் நீங்கள் பேச விரும்பினால், அவருக்கு ஒரு இணைப்பு லிங்க் (Invite Link) அனுப்பினால் போதும். அந்த லிங்க்-ஐ கிளிக் செய்தவுடன், அவர்கள் எந்த ஒரு ஆப்-ஐயும் பதிவிறக்கம் செய்யாமல், போன் அல்லது கணினியில் உள்ள 'வெப் பிரவுசர்' (Browser) மூலமாகவே உங்களுக்கு பதில் அனுப்பலாம்.

அவர்கள் தனது பெயரை மட்டும் உள்ளிட்டு உடனடியாக உரையாடலைத் தொடங்கலாம். அவர் ஒரு விருந்தினராகப் பேசுகிறார் என்பதைத் தெரியப்படுத்த, அந்த சாட்டில் 'விருந்தினர்' என்ற குறிச்சொல் காட்டப்படும்.

வாட்ஸ்அப் என்றாலே பாதுகாப்புதான். இந்த கெஸ்ட் சாட் வசதியிலும் பாதுகாப்புக்கு குறைவில்லை. பிரவுசர் வழியே பேசினாலும், உங்க செய்திகளை உங்களைத் தவிர வேறு யாராலும் படிக்க முடியாதபடி 'எண்ட் டு எண்ட் என்கிரிப்ஷன்' வசதி செய்யப்பட்டுள்ளது. பிடிக்காத கெஸ்ட் சாட் நபர்களை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் 'பிளாக்' (Block) செய்யலாம்.

இது முற்றிலும் தற்காலிகமான மற்றும் அவசர தேவைகளுக்காக உருவாக்கப்பட்டது என்பதால் சில கட்டுப்பாடுகள் உள்ளன.

இதில் எழுத்துக்களை (Text) மட்டுமே அனுப்ப முடியும். வாய்ஸ் மெசேஜ், போட்டோ அல்லது வீடியோக்களை அனுப்ப முடியாது. ஒருவர் ஒருவருடன் மட்டுமே பேச முடியும். குரூப்பில் பேச முடியாது. அந்த சாட்டில் 10 நாட்கள் எந்தப் பேச்சும் இல்லை என்றால், அது தானாகவே மறைந்துவிடும்.

கெஸ்ட் பயனர்களுக்கு மெசேஜ் அலர்ட் வராது. அவர்களாகவேதான் சாட்டை திறந்து பார்க்க வேண்டும்.

இந்த சாட் லிங்க்-ஐ நம்பிக்கைக் குரியவர்களிடம் மட்டுமே பகிருங்கள்.

ஏனெனில், அந்த லிங்க் யாரிடம் இருக்கிறதோ அவர்கள் அந்த உரையாடலுக்குள் நுழைய முடியும்.

Hindusthan Samachar / JANAKI RAM