Enter your Email Address to subscribe to our newsletters

அயோத்தி, 19 மார்ச் (ஹி.ச.)
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அயோத்தியில் அமைந்துள்ள ராமர் ஜென்மபூமி கோவிலுக்கு விஜயம் செய்வதற்காக இன்று மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார்.
அவரை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல், துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மௌரியா மற்றும் பிரஜேஷ் பதக் உள்ளிட்டோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
இந்த விஜயத்தின் போது, குடியரசுத் தலைவர் ராமர் ஜென்மபூமி கோவிலில் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்கிறார். மேலும், ‘ராம யந்திரம்’ நிறுவும் நிகழ்வை அவர் தொடங்கி வைக்கிறார்.
கோவில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் கைவினைஞர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்விற்கு அழைக்கப்பட்டுள்ளனர். காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வை முன்னிட்டு அயோத்தி நகரம் முழுவதும் விழாக்கோலமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.
முக்கிய சாலைகள், சந்திப்புகள் மற்றும் கோவிலுக்குச் செல்லும் வழித்தடங்களில் பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
நகரம் முழுவதும் காவிக் கொடிகள் மற்றும் அலங்காரத் தோரணங்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ள நிலையில், ஆன்மீகச் சூழல் நிலவுகிறது.
பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் போக்குவரத்து மேலாண்மைக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குடியரசுத் தலைவர், ராமர் திருவுருவச் சிலை முன் ‘ஆரத்தி’ நிகழ்வில் பங்கேற்கிறார். மேலும், கோவில் கட்டுமானத்தில் பங்களித்த தொழிலாளர்களை அவர் கௌரவிக்கிறார்.
Hindusthan Samachar / JANAKI RAM