Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 மார்ச் (ஹி.ச.)
தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையிலான 7 பேர் கொண்ட குழு, கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாகத் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
சட்டமன்றத் தேர்தலுக்கான தி.மு.க. தலைமையிலான கூட்டணியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 6 இடங்களில் போட்டியிட்ட வி.சி.க., இந்த முறை தனது கட்சியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் குறைந்தது 10 முதல் 12 தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
அதற்குக் கடந்த முறை ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளே ஒதுக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது. இதற்கு விசிக பிடிகொடுக்கவில்லை.
அதே சமயம், கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதாலும், மற்ற கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கைகளாலும் திமுக தரப்பில் 7 முதல் 8 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலினை, தொல். திருமாவளவன் இன்று (19.03.2026) சந்தித்துப் பேசியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது தி.மு.க. கூட்டணியில் தமிழகம் மற்றும் புதுவை எனச் சேர்த்து இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது.
எனவே தொகுதிகளின் எண்ணிக்கையை இறுதி செய்து அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வி.சி.க. தனது
சொந்தச் சின்னமான பானை சின்னத்திலேயே அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவதாகவும், இது குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / vidya.b