Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 19 மார்ச் (ஹி.ச)
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது,
பியூஷ் கோயல் வரும்போது கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும். மத்திய அமைச்சர் ஓரிரு நாட்களில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து பின்னர் அறிவிப்போம்.
தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளது . வேட்பு மனு தாக்கல் செய்ய 10 நாட்கள் அவகாசம் உள்ளது. அமலாக்கத்துறை உள்ளிட்டவைகளை வைத்து யாரையும் மிரட்ட வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. அமலாக்கத்துறை, வருமானத்துறை என்பது சுதந்திரமான அமைப்பு. அமலாக்கத்துறை பிரச்னையில் சிக்கியவர்கள் மீது தான் விசாரணை நடத்தப்படும்.
புதிதாக வழக்கு பதிவு செய்தால் அமலாக்க துறையை வைத்து நாங்கள் மிரட்டுவதாக சொல்லலாம். கடந்த தேர்தலுக்கு முன்னரே அமலாக்கத்துறை விசாரணை நடக்கும் அனைவர் மீதும் அமலாக்கத்துறை வழக்கு உள்ளது. விஜய் கட்சி ஆரம்பிப்பதற்கு முன் இருந்தே திமுக அமைச்சர்கள், விஜய் உள்ளிட்டவர் மீது அமலாக்கத்துறை, வருமானவரித்துறை வழக்குகள் உள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் மீது வழக்கு இருக்கும் சூழலில், இப்போது அதை வைத்து மிரட்டுவதாக சொன்னால் சரியானதாக இருக்குமா?
தமிழக பாஜவின் தலைவர் என்ற முறையில் நீங்கள் சொல்லும் யாருடனும் நாங்கள் பேச்சு நடத்தவில்லை. விஜய் கட்சியில் இருந்தும் எங்களிடம் பேச்சு நடத்தவில்லை. அப்படி இல்லாத பட்சத்தில் பிம்பம் கம்பம் என்பதெல்லாம் தேவையில்லாதது.
தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கன்னியாகுமரி மற்றும் கோவைக்கு வர உள்ளார். அவர் வரும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
உள்துறை அமைச்சர் அமித்ஷா பாஜவின் தேசிய தலைவர் நிதின் நபீன் என அகில இந்திய தலைவர்கள் பலரும், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் போன்றோரும் தேர்தல் பிரசாரத்திற்காக வரவுள்ளனர். திமுக கூட்டணி கட்சிகளின் சீட்டு குறைக்கப்பட்டுள்ளதாக அனைவரும் சொல்கிறார்கள்.
திமுக கூட்டணி கட்சிகளுக்கான சீட்டை மக்களும் குறைப்பார்கள். பாஜ ஜாதியை சார்ந்தோ, மதத்தை சார்ந்தோ உள்ள கட்சி கிடையாது. மதம் சார்ந்த கட்சி என்றால் அது திமுக தான். அதனை மறுப்பு இல்லாமல் பகிரங்கமாக சொல்ல முடியும். ஹிந்துக்கள் வாக்குகள் எங்களுக்கு வேண்டாம் என முதல்வர் வெளிப்படையாக சொல்லி உள்ளார்.
பாஜ அப்படியல்ல இஸ்லாமிய அமைப்புகளாக இருந்தாலும் நேரடியாக அவர்கள் நிகழ்வில் பங்கேற்று கொள்கிறோம்.
கிறிஸ்தவர்களாக இருந்தாலும் அவர்கள் நிகழ்வில் பங்கேற்கிறோம். இந்த நல்ல நாளில் அனைவருக்கும் யுகாதி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b