Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 மார்ச் (ஹி.ச.)
நாடு முழுவதும் கடந்த 2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவைத் திட்டம், தற்போது தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் 1,353 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படும் நிலையில்
5000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஒரு நாளுக்கு 12 மணி நேரப் பணி என்ற அடிப்படையில் 2 ஷிப்ட்களில் பணியாற்றும் பணியாளர்கள், தங்களது வேலை நேரத்தை 8 மணி நேரமாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அதில் உடன்பாடு எட்டப்படாததால் சென்னை தொழிளாளர் தீர்ப்பாய விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த வழக்கு தீர்ப்பாய தலைவரான டாக்டர் பி.முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சங்கம் தரப்பில் 12 மணி நேரம் பணியாற்றுவதால், தூக்கமில்லாமல் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சில நேரங்களில் விபத்துகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த 12 மணி நேர பணி நடைமுறை தொழிலாளர் சட்டத்துக்கு விரோதமானது எனவும் வாதிடப்பட்டது.
ஆம்புலன்ஸ் நிறுவனமான இ.எம்.ஆர்.ஐ. - ஜி.ஹெச்.எஸ்.(EMRI - GHS) தரப்பில் எந்தவித லாப நோக்கமும் இல்லாமல், பொதுமக்களுக்கு இலவசமாக 24 மணி நேரமும் சேவை வழங்கப்படுவதாகவும், ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு 12 மணி நேர பணி என்ற நடைமுறை நாடு முழுவதும் பின்பற்றப்படுகிறது என்றும், பணியில் சேரும் ஊழியர்கள் அதை ஏற்றுக்கொண்டு உள்ளதாகவும், 12 மணி நேரத்துக்கான ஊதியம்தான் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்க மறுத்த தீர்ப்பாயம், சர்வதேச தொழிலாளர் அமைப்பு விதிகளின்படி ஒரு நாளுக்கு 8 மணி நேரம் மட்டுமே பணி நேரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி, தொழிலாளர் சட்டங்களுக்கு விரோதமாக பின்பற்றப்படும் 12 மணி நேர பணி நேரத்தை 8 மணி நேரமாக குறைக்க வேண்டும் என ஆம்புலன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவு குறித்து தொழில் தகராறு சட்டத்தின் கீழ் அரசிதழில் அறிவிக்கை வெளியிட்ட 30 நாட்களில் 8 மணி நேர பணி நடைமுறை அமலுக்கு வரும் என்றும், அதுவரை 12 மணி நேரம் பணியாற்றும் ஊழியர்களுக்கு கூடுதல் பணி நேரத்துக்கான (ஓவர் டைம்) ஊதியத்தை வழங்க வேண்டும் எனவும் தொழிலாளர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இதேபோல, 108 ஆம்புலன்சின் பெண் பணியாளர்களுக்கு ஆம்புலன்ஸ் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட அரசு கட்டடங்களில் தனி ஓய்வறைகள் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும், அங்குள்ள கழிவறைகளை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam