Enter your Email Address to subscribe to our newsletters

வேலூர், 20 மார்ச் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.
தேர்தல் பறக்கும் படையினர், தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் மாநகராட்சி மேயரான உள்ள திமுகவை சேர்ந்த சுஜாதா தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சத்துவாச்சாரியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலின் பின்புறம் அமைந்துள்ள மாநகராட்சி கட்டடத்தில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் மேயர் சுஜாதா கலந்து கொண்டுள்ளார். அதை சிலர் வீடியோ பதிவு செய்வதை கவனித்த மேயர், உடனடியாக அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு சென்றார்.
அந்த காரை அதிகாரிகள் சிலர் சோதனை செய்ய முயன்ற நிலையில், கார் அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு, மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சுப்புலட்சுமியிடம் புகார் தெரிவித்தார்.
அதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் சதீஷ் வேலன், சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், “அம்மா உணவகம் பின்புறம் தேர்தல் விதிமீறி பொருட்கள் விநியோகம் நடைபெறுகிறது என்ற தகவலைத் தொடர்ந்து, TN23 DK9579 என்ற பதிவு எண்ணுடைய காரை சோதனை செய்ய முயன்றோம். அப்போது காரில் இருந்தவர் தன்னை மேயர் என அடையாளப்படுத்திக் கொண்டார். ஆனால், கார் ஓட்டுநர் திடீரென வாகனத்தை இயக்கி அங்கிருந்து தப்பிச் சென்றார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மேயர் பயன்படுத்தியதாக கூறப்படும் காரின் விவரங்களின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து, மேயரின் கார் ஓட்டுநர் மீது தேர்தல் காலத்தில் பரிசுப்பொருட்கள் விநியோகம் செய்ய முயன்றது மற்றும் அரசு ஊழியரை பணியில் இருந்து தடுக்க முயன்றது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்திய தண்டனைச் சட்டத்தின் 173 மற்றும் 132 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, சம்பந்தப்பட்ட காரை சத்துவாச்சாரி காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையில், இந்த வழக்கில் மேயர் சுஜாதாவையும் குற்றவாளியாக இணைத்து வழக்குப்பதிவு செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய சம்பவத்தில் மேயரின் கார் பறிமுதல் செய்யப்பட்டது மட்டுமின்றி, ஓட்டுநர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்ட சம்பவம் வேலூர் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN