ஜூன் மாதம் முதல் வாட்ஸ்அப் கொண்டு வரும் புதிய வசதி!
சென்னை, 22 மார்ச் (ஹி.ச.) உலக அளவில் முக்கியமான குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்அப், அதனுடைய பயனர்களின் தனிப்பட்ட பாதுகாப்பை அதிகப்படுத்தும் விதமாக ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவர இருக்கிறது. இனி உங்களுடைய மொபைல் எண்ணை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தாமலேயே
ஜூன் மாதம் முதல் வாட்ஸ்அப் கொண்டுவரும் புதிய வசதி!


சென்னை, 22 மார்ச் (ஹி.ச.)

உலக அளவில் முக்கியமான குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்அப், அதனுடைய பயனர்களின் தனிப்பட்ட பாதுகாப்பை அதிகப்படுத்தும் விதமாக ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவர இருக்கிறது.

இனி உங்களுடைய மொபைல் எண்ணை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தாமலேயே பேசக்கூடிய வசதி விரைவில் வரப்போகிறது.

வாட்ஸ்அப் இதுவரை செய்யாத ஒரு பெரிய மாறுதலை செய்ய தயாராகி வருகிறது. மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த மெசேஜிங் செயலி, சீக்கிரமே பயனர்பெயர் மூலமாக தொடர்பு கொள்ளும் புதிய வசதியை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இதன் மூலமாக, உபயோகிப்பாளர்கள் தங்களுடைய தொலைபேசி எண்ணை பகிராமல் ஒருவரோடு ஒருவர் பேசவும், செய்தி அனுப்பவும் முடியும். இதனால் உபயோகிப்பாளர்கள் தங்களுடைய மொபைல் எண் இல்லாமல் வாட்ஸ்அப்-ஐ பயன்படுத்த முடியும் என்பதால் தேவையில்லாத தொல்லைகள் தவிர்க்கப்படுவதோடு, பிரைவசியும் காப்பாற்றப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் முதல் இந்த சேவை தொடங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. தற்போது வரை வாட்ஸ்அப்பில் ஒருவருடன் பேச வேண்டும் என்றால், நமது 10 இலக்க மொபைல் எண்ணைக் கொடுத்தால் மட்டுமே சாத்தியம். ஆனால், இனி வரப்போகும் அப்டேட்டில், இன்ஸ்டாகிராம் அல்லது டெலிகிராம் செயலிகளைப் போலவே நமக்கென ஒரு தனித்துவமான அடையாளப் பெயரை (Username) உருவாக்கிக் கொள்ளலாம்.

முன்பின் தெரியாத நபர்களுக்கோ அல்லது பொதுவான வாட்ஸ்அப் குழுக்களிலோ உங்கள் போன் நம்பரைத் தராமல், யூசர்நேமை மட்டும் கொடுத்து உரையாடலைத் தொடங்கலாம். உங்கள் எண் தெரியாது என்பதால், மர்ம நபர்களிடமிருந்து வரும் தேவையற்ற அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளைத் தவிர்க்க முடியும்.

அறிமுகமில்லாதவர்களிடம் எண்ணைப் பகிரத் தயங்கும் நபர்களுக்கு இது ஒரு கூடுதல் பாதுகாப்பு கவசமாக அமையும். உங்கள் போன் நம்பரை ஏற்கனவே சேமித்து வைத்திருப்பவர்களுக்கு அது தொடர்ந்து தெரியும். புதிதாக ஒருவரைத் தொடர்பு கொள்ளும்போது மட்டுமே இந்த யூசர்நேம் வசதியைப் பயன்படுத்த முடியும்.

இந்த அம்சம் தற்போது இறுதிக்கட்ட சோதனையில் உள்ளது, விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / JANAKI RAM