Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி, 22 மார்ச் (H.S.)
கடந்த பிப்ரவரி 22 -ஆம் தேதி, ராஜமகேந்திரவரம் கிம்ஸ் மருத்துவமனையில், சிறுநீர் வெளியேறாமை, வாந்தி, வயிற்றுவலி மற்றும் டயாலிசிஸ் தேவைப்படும் தீவிர சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட கடுமையான அறிகுறிகளுடன் பல முதியவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
பாதிக்கப்பட்டவர்கள் ராஜமகேந்திரவரம் லலாசெருவுப் பகுதியில் உள்ள சௌதேஸ்வரநகர் மற்றும் ஸ்வரூபநகர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
மருத்துவ பரிசோதனைகளில், ரத்த யூரியா மற்றும் சீரம் கிரியேட்டினின் அளவுகள் அதிகரித்த நிலையில் தீவிர சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது நச்சுப் பொருள் தாக்கம் இருக்கக்கூடும் என்பதைக் குறிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதற்கட்ட நோய்ப்பரவியல் விசாரணையில், பால் நுகர்வு மற்றும் நோய் தாக்கம் இடையே தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.
கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் நரசபுரம் கிராமத்தில் வரலட்சுமி பால் பண்ணை என்ற பெயரில் அட்டல கணேஸ்வர ராவ் என்பவர் அங்கீகாரம் பெறாத வகையில், பால் பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார்.
சர்ச்சைக்குரிய ‘வரலட்சுமி பால் பண்ணை’யிலிருந்து 106 குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டிருந்தது ஆந்திராவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்த நிலையில் பால் கலப்படம் காரணமாக ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 16-ஆக உயர்ந்துள்ளது.
இதை மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி (DMHO) கே. வெங்கடேஸ்வர ராவ் இன்று உறுதிப்படுத்தினார்.
மேலும், மூவர் ராஜமகேந்திரவரத்தில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
சர்ச்சைக்கு பின்னர் அந்தப் பால் பண்ணையிலிருந்து பால் விநியோகம் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b