Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 மார்ச் (ஹி.ச.)
தமிழ்நாடு, கேரளம், அசாம், மேற்குவங்கம் மற்றும் புதுவை ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சிகள் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
அதன்படி பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அ.தி.மு.க. மற்றும் பாஜக இடையிலான முக்கியக் கட்டப் பேச்சுவார்த்தை நாளை (23.03.2026) மாலை நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதற்காகத் தமிழக பா.ஜ.க. மேலிடப் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் நாளை காலை 10 மணிக்குச் சென்னை வரவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவர் நாளை மாலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து இது தொடர்பாக ஆலோசிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அப்போது பாஜகவுக்கு 27 முதல் 29 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிலும் குறிப்பாகச் சென்னையில் வேளச்சேரி, மயிலாப்பூர் மற்றும் தியாகராயநகர் உள்ளிட்ட முக்கியத் தொகுதிகளை பா.ஜ.க. கோரியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மற்றொருபுறம் அதிமுக சார்பில் ஏற்கனவே கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கொண்ட தொகுதிப் பங்கீட்டுக் குழுவை அமைத்து, தனது கூட்டணிக் கட்சிகளான பா.ம.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்தச் சந்திப்பின் முடிவாக நாளை மாலை நடைபெறவுள்ள கூட்டத்தில் இரு கட்சிகளுக்கும் இடையிலான அதிகாரப்பூர்வ தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னர் பியூஸ் கோயல் நாளை இரவு டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
முன்னதாக எடப்பாடி பழனிசாமி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கடந்த 19ஆம் தேதி காலை 10 மணியளவில் டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டார்.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது தொகுதிப் பங்கீடு தொடர்பாக இருவரும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், அ.ம.மு.க. பொதுச்செயலர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் நேற்று முன்தினம் (20.03.2026) டெல்லிக்குச் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b