Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 மார்ச் (ஹி.ச)
சென்னை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், ஓடும் ரயில்கள் மீது கல்வீசும் சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் மிக முக்கியமான வேண்டுகோளையும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.
இத்தகைய சட்டவிரோத செயல்கள் பயணிகளின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைவதோடு, ரயில்வே ஊழியர்களுக்கு ஆபத்தையும், பொதுச்சொத்துகளுக்கு சேதத்தையும், ரயில் சேவையில் இடையூறுகளையும் ஏற்படுத்துகின்றன.
ரயில்கள் மீது கல்வீசுவது ஒரு கடுமையான குற்றமாகும். ஓடும் ரயிலின் மீது வீசப்படும் கற்கள் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து, உள்ளே இருக்கும் பயணிகள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்குப் பெரிய காயங்களையும், நிரந்தர உடல் பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடும். மேலும், இத்தகைய சம்பவங்கள் பயணிகளிடையே தேவையற்ற அச்சத்தையும் மன உளைச்சலையும் உண்டாக்குகின்றன.
ரயில்வே சட்டம், 1989-ன் கீழ் ரயில்கள் மீது கல்வீசுவது தண்டனைக்குரிய குற்றமாகும்:
பிரிவு 152:
ரயிலின் மீது தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் கல் அல்லது எந்தவொரு பொருளையும் வீசுவது கடும் குற்றமாகும்.
இதற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.
பிரிவு 154:பயணிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்களுக்குச் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் வசிக்கும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், இத்தகைய செயல்களால் ஏற்படும் விளைவுகள் குறித்து சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரை வழங்க வேண்டும். இத்தகைய அசம்பாவிதங்களைத் தடுக்கச் சமூகத்தின் பங்களிப்பு மிகவும் அவசியமாகும்.
தீவிரக் கண்காணிப்பு நடவடிக்கைகள்:
சென்னை கோட்டத்தின் முக்கியமான மற்றும் பதற்றமான பகுதிகளில் ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) மற்றும் அரசு ரயில்வே போலீஸார் (GRP) ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். குற்றவாளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கச் சிசிடிவி (CCTV) மற்றும் இதர நவீன கண்காணிப்பு முறைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான செயல்கள் ஏதேனும் நடந்தால், பொதுமக்கள் மற்றும் பயணிகள் உடனடியாக ரயில்வே உதவி எண் 139-க்குத் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அனைத்துப் பயணிகளுக்கும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதில் சென்னை ரயில்வே கோட்டம் உறுதியுடன் உள்ளது.
உயிர்ச் சேதங்களையும் ரயில்வே சொத்துகளையும் பாதுகாக்கப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு சென்னை ரயில்வே கோட்டம் அறிவுறுத்தி உள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ