Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 23 மார்ச் (ஹி.ச.)
மதுரை மாவட்டத்தில் மதுரை - தொண்டி சாலையில் இருந்து வரும் வாகனங்களாலும், உள்ளூர் வாகனங்களாலும் மேலமடை சந்திப்பில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதற்கு நிரந்தர தீர்வு காண வசதியாக, தமிழக அரசின் தரப்பில் அச்சாலையில் உள்ள ஆட்சியர் அலுவலகம், ஆவின் மற்றும் அப்பல்லோ சந்திப்பு ஆகிய இடங்களில் போக்குவரத்து சிக்னல்களை அகற்றி ரவுண்டானாவுடன் கூடிய மேம்பாலம் அமைக்க முடிவானது.
இத்திட்டத்தின் கீழ், மேம்பாலம் 30 தூண்களுடன் 1,100 மீட்டர் நீளம், 17.2 மீட்டர் அலகத்துடன் நான்கு வழிச்சாலையுடன் அமைக்கவும் ஒட்டுமொத்த திட்டத்தையும் ரூ.150.28 கோடியில் முடிக்கவும் திட்டமிடப்பட்டது.
இதன்படி பாலப்பணிகளும், ஆட்சியர் அலுவலகம், ஆவின் சந்திப்புகளில் சாலை விரிவாக்கப்பட்டு, ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்தபடியாக புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள தொண்டி சாலையில அதன் அகலத்திற்கு ஏற்ற வகையில் வண்டியூர் பாலத்தை நான்கு வழிச்சாலை பாலமாக விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது.
இதற்காக ரூ.4.70 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போதுள்ள பாலத்தின் அருகிலேயே விரிவாக்கம் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்ன.
அதன்படி, 10.5 மீட்டர் அகலமுள்ள பாலத்தை 18.5 மீட்டர் அலகத்திற்கு விரிவாக்கம் செய்யும் விதமாக, முதற்கட்டமாக தூண்கள் எழுப்புவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பாலமும் விரிவாக்கம் செய்யப்பட்டால் மதுரை - தொண்டி சாலையில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு போக்குவரத்து நெரிசல் முற்றிலும் தடுக்கப்படும் என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b