Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 மார்ச் (ஹி.ச)
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், 242 பயணிகளுடன், சென்னைக்கு வந்து கொண்டு இருந்தது. அந்த விமானம் நள்ளிரவு, சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க தயாரானது.
அப்போது அந்த விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த மீனாட்சிசுந்தரம் ராமசாமி (66) என்ற பயணிக்கு, திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதை அடுத்து விமான பணிப்பெண்கள், விமானிக்கு அவசரமாக தகவல் தெரிவித்தனர்.
இதை அடுத்து விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு, பயணி ஒருவருக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதால், விமானம் தரையிறங்குவதற்கு, வரிசையில் காத்திருக்க வைக்காமல், அவசரமாக சென்னையில் தரையிறங்க அனுமதிப்பதோடு, மருத்துவக் குழுவினரையும், தயார் நிலையில் வைத்திருக்கும்படி கூறினார்.
அதன்படி அந்த விமானம் குறிப்பிட்ட நேரத்திற்கு, 10 நிமிடங்கள் முன்னதாகவே, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. உடனடியாக விமான நிலைய மருத்துவக் குழுவினர், விமானத்துக்குள் ஏறி, பயணிக்கு முதலுதவிகிச்சை அளித்து, விமானத்தில் இருந்து கீழே இறக்கி, விமான நிலைய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே, பயணி உயிரிழந்தார். உடனடியாக சென்னை விமான நிலைய போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, தாம்பரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதோடு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள, பயணியின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். பயணி மீனாட்சி சுந்தரம் ராமசாமியின் மகள், மலேசியாவில் வசித்து வருவதால், இவர் மகள் வீட்டிற்கு சென்றிருந்தபோது, இரணியா ஆப்ரேஷன் செய்து விட்டு, சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது, திடீரென மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என்று, போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
Hindusthan Samachar / ANANDHAN