திருவண்ணாமலையில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பணி நியமன ஆணை இன்று முதல் விநியோகம்
திருவண்ணாமலை, 23 மார்ச் (ஹி.ச.) தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் அடுத்த மாதம் 23-ம் தேதி ஒரே கட்டமாக மாநிலம் முழுவதும் நடைபெற உள்ளது. அதையொட்டி, வரும் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. அடுத்த மாதம் 6ம் தேதி வரை மனுக்கள் பெறப்பட
திருவண்ணாமலையில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பணி நியமன ஆணை இன்று முதல் விநியோகம்


திருவண்ணாமலை, 23 மார்ச் (ஹி.ச.)

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் அடுத்த மாதம் 23-ம் தேதி ஒரே கட்டமாக மாநிலம் முழுவதும் நடைபெற உள்ளது.

அதையொட்டி, வரும் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

அடுத்த மாதம் 6ம் தேதி வரை மனுக்கள் பெறப்படும். அதைத்தொடர்ந்து, 7-ம் தேதி வேட்புமனுக்கள் பரீசீலனை நடைபெறும்.

வரும் 9ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

தேர்தலை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை, செங்கம், கலசபாக்கம், கீழ் பென்னாத்தூர், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில், 2516 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதோடு, 8 சட்டமன்ற தொகுதிகளில் பணிபுரிய அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் 12,076 பேர் வாக்குச்சாவடி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா 4 பேர் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், 20 சதவீதம் பேர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுவார்கள்.

தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பணி நியமன ஆணை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் இன்று முதல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மூன்று கட்டங்களாக பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, முதற்கட்ட பயிற்சி வகுப்பு வரும் 28ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, செங்கம், தண்டராம்பட்டு, கீழ்பென்னாத்தூர், கலசபாக்கம், போளூர், செய்யாறு, ஆரணி, வந்தவாசி, சேத்துப்பட்டு, வெம்பாக்கம், ஜவ்வாதுமலை ஆகிய 12 தாலுகாக்களில் இப்பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

இப்பயிற்சி வகுப்பில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும் முறை, இரண்டு பேலட் யூனிட்களை, கட்டுப்பாட்டு இயந்திரத்துடன் இணைப்பது எப்படி, படிவங்களை முறையாக பூர்த்தி செய்தல், மாதிரி வாக்குப்பதிவு நடத்துதல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைத்தல் போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b