Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 24 மார்ச் (ஹி.ச.)
அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந் தேதி ஈரான் நாட்டை கடுமையாக தாக்கின.
தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானும் பதிலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது.
போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகளும், ஐ.நா., உலக சுகாதார அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகளும் வலியுறுத்தி வந்த போதிலும், 3 வாரங்களுக்கும் மேலாக மோதல் தொடர்ந்து வருகிறது.
இதற்கிடையில் சமீபத்திய உலகளாவிய மற்றும் பிராந்திய அளவிலான பாதுகாப்பு சம்பவங்கள் தொடர்பாகவும், இந்தியாவின் பாதுகாப்புக்கு தயாராவது குறித்தும் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று மறுஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், விமான படை தலைமை தளபதி அமர் பிரீத் சிங், ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவிவேதி, கடற்படை தலைமை தளபதி தினேஷ் திரிபாதி, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகத்தின் தலைவர் சமீர் காமத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் மேற்காசிய போர் நிலவரம் குறித்து விவாதிக்க நாளை (மார்ச் 25) மாலை 5 மணிக்கு டில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்துக்கட்சிகளும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
போர் தாக்கங்களில் இருந்து மக்களை பாதுகாக்க இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் விளக்கம் அளிப்பார்கள் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / vidya.b