வி.சி.க சிதைக்கப்படும் அளவிற்கு பலவீனமான கட்சி அல்ல - திருமாவளவன்
சென்னை, 24 மார்ச் (ஹி.ச.) தி.மு.க. - விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையேயான கூட்டணியில் 2ஆம் கட்ட தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்று (24.03.2026) நடைபெற்றது. திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செ
Thirumavalavan


சென்னை, 24 மார்ச் (ஹி.ச.)

தி.மு.க. - விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையேயான கூட்டணியில் 2ஆம் கட்ட தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்று (24.03.2026) நடைபெற்றது.

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் 2 பொதுத் தொகுதிகள்,

6 தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணி உடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:

நேற்று நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலை குழு கூட்டத்தில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை பெற வேண்டும் என்றும், ஒரு ராஜ்யசபா எம்பி 2028 இல் காலியாக உள்ள இடத்தில் பெற வேண்டும் என வலியுறுத்தவும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினர்.

அது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினிடம் கலந்து பேசினோம். 23 கட்சிகள் கொண்ட மெகா கூட்டணி. 7,8 ஆண்டுகளாக கட்டுப்கோப்பாக இயங்கி வரும் கூட்டணி. மதவாத சக்தியை தடுக்கவும், இடதுசாரி ஜனநாயகத்தை காத்திடவும் இந்த கூட்டணியில் நீடிக்கிறோம்.

அனைத்து கோணங்களிலும் நல்லது, கெட்டதை சீர்தூக்கி பார்த்து, விசிக நலன் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு நாம் அங்கம் வகிக்கும் கூட்டணியின் நலனும் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு இந்த முடிவிற்கு விசிக உடன்பட்டுள்ளது. முழு மன திருப்தியோடு தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளேன்.

இடதுசாரி ஜனநாயக அரசியல் தமிழக மண்ணில் பாதுகாக்க வேண்டும் என்பது முக்கியம். வலதுசாரி பிற்போக்கு அரசியல் வலுப்பெற்று விடக்கூடாது. காலூன்றிவிடக் கூடாது என்பதை நாங்கள் தெளிவுப்படுத்தி இருக்கிறோம்.

அதன் அடிப்படையில் தான் பேச்சுவார்த்தை நடத்தி முடித்திருக்கிறோம். 200க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கையோடு, தேர்தல் பணிகளை முன்னெடுப்போம். தமிழக மக்களின் ஆதரவோடு இந்த கூட்டணி வெற்றி பெறும்.

தற்காலிகமாக இந்த தேர்தலில் எங்களுக்கு என்ன லாபம் என கணக்கு போட்டு, வலசாரிகள் வலுப்பெறுவதற்கு இடம் கொடுத்துவிட்டால், தமிழகத்தில் மதவாத அரசியல் செய்பவர்களின் கைகள் ஓங்கும். ஒன்று, இரண்டு தொகுதிகளுக்காக முரண்பட்டு, கூட்டணிக்குள் சலசலப்பை உருவாக்கி, வெற்றிக்கான வாய்ப்பை கெடுத்து விடாமல் இருக்க இந்த முடிவை எடுத்து இருக்கிறோம்.

விசிக சிதைக்கப்படும் அளவிற்கு பலவீனமான கட்சி அல்ல. நாளுக்கு நாள் வலுப்பெற்று வரும் மாநில கட்சி. எங்கள் பலம் என்ன? பலவீனம் என்ன? எங்களுக்கு தெரியும். அதன் அடிப்படையில் தான் முடிவு எடுத்திருக்கிறோம். திமுக இருக்கும் இடத்தில் இருந்து விசிக இருந்து அனைத்தையும் சீர்தூக்கி பார்க்கிறோம்.

புதுச்சேரியில் விசிக தனித்து போட்டி என அறிவித்திருந்தோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் 3 தொகுதிகளில் போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளோம். வேட்புமனுக்களை திரும்ப பெற காலஅவகாசம் உள்ளது. 8 என்பதே எட்டிப்பிடி என்பதற்கான ஒரு சைகை தான். எங்கள் இலக்கை எட்டுவோம்.

வெற்றியை எட்டுவோம். நாங்கள் தமிழகத்தில் தவிர்க்க முடியாத ஒரு சக்தி என்பதை நிலைநாட்டுவோம். விசிக அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்பதால் 8 தொகுதிகளிலும் பானை சின்னத்தில் போட்டியிடுவோம்.

ராஜ்யசபா எம்பி குறித்து கேட்டிருக்கிறோம். ஆனால் அழுத்தம் கொடுக்கவில்லை.

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b