Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 25 மார்ச் (ஹி.ச.)
நாடாளுமன்ற மக்களவையில் இன்று 2026-ம் ஆண்டுக்கான நிதி மசோதா 32 அரசுத் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
இதன் மூலம், மக்களவையில் நிதிநிலை அறிக்கை ஒப்புதலுக்கான நடைமுறை நிறைவு செய்யப்பட்டது.
இனி நாடாளுமன்ற மேலவையான மாநிலங்களவைக்கு இந்த மசோதா பரிசீலனைக்காக அனுப்பப்படும். மாநிலங்களவை இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்த பிறகு, 2026-27ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை செயல்முறை நிறைவடையும்.
மத்திய நிதிநிலை அறிக்கையில், 2026-27ம் நிதியாண்டிற்கான மொத்த செலவினம் ரூ.53.47 லட்சம் கோடியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது, வரும் மார்ச் 31-ந்தேதியோடு முடிவடையும் நடப்பு நிதியாண்டை விட 7.7 சதவீதம் அதிகமாகும்.
அதே போல், மத்திய நிதிநிலை அறிக்கையில், அடுத்த நிதியாண்டிற்கான மொத்த மூலதனச் செலவு ரூ.12.2 லட்சம் கோடி என்று முன்மொழியப்பட்டுள்ளது. மேலும், அடுத்த நிதியாண்டில் மொத்த வரி வருவாய் வசூல் ரூ.44.04 லட்சம் கோடி, கடனாக வாங்கும் தொகை ரூ.17.2 லட்சம் கோடியாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
2027-ம் நிதியாண்டிற்கான நிதிப் பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.3 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam