Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 25 மார்ச் (ஹி.ச)
காங்கிரஸ் மூத்த தலைவரும், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவருமான சோனியா காந்தி, உடல்நிலை பாதிப்பு காரணமாக புதுடெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவுமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது.
சோனியா காந்தியின் உடல்நிலையில் கவலைக்குரிய தீவிர பாதிப்புகள் ஏதும் இல்லை என்றும், அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவரது மகனும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று மேற்கொள்ள இருந்த கேரள சுற்றுப் பயணத்தை திடீரென ரத்து செய்துள்ளார்.
கேரளாவின் கோழிக்கோடு நகரில் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் (யுடிஎஃப்) தேர்தல் பிரச்சாரத்தை ராகுல் காந்தி இன்று தொடங்கி வைப்பதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
யுடிஎப் அணியின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து ராகுல் காந்தி விரிவாகப் பேசுவார் என கேரள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் பிரச்சாரக் குழு தலைவர் ரமேஷ் சென்னிதாலா கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
ராகுல் காந்தி தனது பயணத்தை ரத்து செய்துள்ள நிலையில், அவருக்குப் பதிலாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோழிக்கோடு பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மற்றும் மாநில அளவிலான காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b