Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 25 மார்ச் (ஹி.ச.)
தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலை இசைப்பதற்கான நடைமுறைகளை வகுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜனவரி 28ஆம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கைக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு, நீதிபதிகள் ஜாய்மால்ய பாக்ஜி மற்றும் விபுல் எம். பன்சோலி ஆகியோர் முன்னிலையில் இன்று இந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனு முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், குறித்த சுற்றறிக்கை எந்தவித தண்டனை நடவடிக்கைகளுக்கும் வழிவகுப்பதில்லை என்று சுட்டிக்காட்டினர்.
இதனால், மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் விருப்பம் இல்லை என தெரிவித்த அமர்வு, மனுவை தள்ளுபடி செய்தது.
முன்னதாக, தேசிய நிகழ்ச்சிகளில் தேசியப் பாடல் ‘வந்தே மாதரம்’ மற்றும் தேசிய கீதம் இசைக்கப்படும் போது, ‘வந்தே மாதரம்’ பாடலின் அதிகாரப்பூர்வ வடிவிலுள்ள ஆறு சரணங்களையும் முதலில் இசைக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டிருந்தது.
இந்த வழிகாட்டுதல்களின் பின்னணியிலேயே இத்தீர்ப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ‘வந்தே மாதரம்’ பாடலின் அனைத்து ஆறு சரணங்களையும் முழுமையாகப் பாடுவதற்கு சில தரப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
1950ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சபையால் தேசியப் பாடலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முதல் இரண்டு சரணங்களையே பாட வேண்டும் என்றே அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b