Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 25 மார்ச் (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தளி மற்றும் ஓசூர் சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று கெலமங்கலத்தில் தேர்தல் வாகனப் பரப்புரை மேற்கொண்டார்.
தளி சட்டமன்றத் தொகுதியில் கணினித் துறையில் பட்டயம் பெற்ற நரசிம்மனும், ஓசூர் தொகுதியில் பொருளாதாரம் பயின்ற ஸ்டாலிnனும் விவசாயி சின்னத்தில் போட்டியிடுவதாக சீமான் அறிமுகப்படுத்தினார்.
அதன்பின் பேசிய சீமான் கூறுகையில்,
கடந்த 60 ஆண்டுகளாகத் தமிழகத்தை ஆண்டு வரும் திராவிடக் கட்சிகள், சாதி, மதம், சாராயம் மற்றும் பணம் ஆகிய நான்கு தூண்களை வைத்தே அரசியலை நடத்தி வருகின்றன.
இவர்களின் ஆட்சியில் சலுகைகளும் இலவசங்களும் மட்டுமே வழங்கப்படுகிறதே தவிர, தொலைநோக்குத் திட்டங்கள் எதுவுமில்லை . அரசுகள் வழங்கும் இலவசங்கள் என்பது மக்களின் வரிப்பணத்தில் இருந்து பெறப்படுபவை.
நாம் தனித்தனியாகக் கையேந்தினால் அது பிச்சை, அனைவரும் சேர்ந்து கையேந்தினால் அது இலவசமா?
இலவசங்கள் மக்களை அடிமைகளாக வைத்திருக்கவே பயன்படுகின்றன.
ஒரு நல்ல அரசு என்பது தரமான இலவசக் கல்வி, வேலைவாய்ப்பு, தடையற்ற மின்சாரம், தூய குடிநீர், மற்றும் உயிர்காக்கும் மருத்துவம் ஆகியவற்றை அடிப்படைத் தேவைகளாக வழங்க வேண்டும்.
நிலத்தையும் வளத்தையும் அழிக்கும் தொழிற்சாலைகளை விடுத்து, வேளாண்மை சார்ந்த தொழில்களை (சர்க்கரை ஆலைகள், வாழை நார் ஆடைகள் போன்றவை) உருவாக்குவதே தமது கட்சியின் இலக்கு.
உணவை மீட்போம், உலகைக் காப்போம் என்பதே நாம் தமிழர் கட்சியின் முதன்மை முழக்கம் . தமிழினம் என்பது முல்லைக்குத் தேரையும், மயிலுக்குப் போர்வையையும் கொடுத்த வள்ளல் பாரி மற்றும் பேகனின் வாரிசுகள்.
தமிழர்கள் தங்கள் மானத்தையும் உரிமையையும் மீட்டெடுக்கப் போராட வேண்டும். வருகிற ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில், தமிழர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், மாற்றத்தை உருவாக்கவும் மக்கள் அனைவரும் விவசாயி சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.
இந்தத் தேர்தல் மற்றவர்களுக்குப் போர்க்களம், ஆனால் எங்களுக்கு இது ஒரு புரட்சிகர அரசியல் களம்.
என்று கூறி அவர் தனது உரையை நிறைவு செய்தார்.
Hindusthan Samachar / vidya.b