Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 27 மார்ச் (ஹி.ச.)
மதுரை மாநகரில் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் கடும் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாக நூற்றுக்கணக்கான டீக்கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இதுகுறித்து டீக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்ததாவது:
கடந்த சில நாட்களாக எரிவாயு சிலிண்டர்கள் கிடைப்பதில் பெரும் சிரமம் நிலவி வருகிறது. கிடைக்கும் சிலிண்டர்களும் வழக்கத்தை விட அதிக விலையில் விற்கப்படுகின்றன.
ஒரு சிலிண்டரின் விலை ₹3,300 முதல் ₹4,000 வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விலை உயர்வால் தினசரி வருமானத்தை சார்ந்துள்ள சிறு தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் விளைவாக, மதுரை மாநகரில் மட்டும் சுமார் 500 முதல் 600 டீக்கடைகள் வரை செயல்பாடுகளை நிறுத்தியுள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மதுரை மாநகரில் மொத்தம் 4,300-க்கும் மேற்பட்ட டீக்கடைகள் உள்ளன.
இதில் 1,200-க்கும் மேற்பட்டோர் சங்க உறுப்பினர்களாக உள்ளனர். தற்போதைய சூழ்நிலையில், உறுப்பினர்களில் பெரும்பாலோர் தொழிலை தொடர்ந்து நடத்த முடியாமல் திணறி வருகின்றனர்.
சிலர் மாற்று வழியாக தனியார் எரிவாயு நிறுவனங்களை நாடி வருகின்றனர். எனினும், தொடர்ந்து சிலிண்டர் கிடைக்காததால் ஒரு நாள் கடை திறந்து, மறுநாள் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல தலைமுறைகளாக இந்தத் தொழிலை செய்து வரும் கடை உரிமையாளர்களுக்கே தற்போது வாழ்வாதார சிக்கல் உருவாகியுள்ளது.
பொதுமக்களுக்கு தொடர்ந்து சேவை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
எரிவாயு விநியோகத்தை சீரமைத்து, விலை கட்டுப்பாட்டில் கொண்டு வர அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டீக்கடை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / Durai.J