டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்திகை பயிற்சி
புதுடெல்லி, 29 மார்ச் (ஹி.ச.) மாறிவரும் பாதுகாப்பு சவால்களை முன்னிட்டு, தங்களின் செயல்திறன் மற்றும் தயார்நிலையை மதிப்பிடுவதுடன், பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் நோக்கில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃ
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்திகை பயிற்சி


புதுடெல்லி, 29 மார்ச் (ஹி.ச.)

மாறிவரும் பாதுகாப்பு சவால்களை முன்னிட்டு, தங்களின் செயல்திறன் மற்றும் தயார்நிலையை மதிப்பிடுவதுடன், பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் நோக்கில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) இன்று கூட்டுப் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்திகையை மேற்கொண்டது.

இது குறித்து சிஐஎஸ்எஃப் வெளியிட்ட அறிக்கையின்படி,

விரைவுப் பதில் அணிகள், வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் பிரிவுகள், மோப்ப நாய் படை ஆகியவற்றுடன், டெல்லி காவல்துறை, தேசிய பாதுகாப்புப் படை, சிவில் விமானப் பாதுகாப்பு பணியகம், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம், விமான மீட்பு மற்றும் தீயணைப்புத் துறை, மருத்துவ அவசர சேவை பிரிவுகள் உள்ளிட்ட பல அமைப்புகள் இணைந்து இந்தப் பயிற்சியில் ஈடுபட்டன.

பயிற்சியின்போது, பங்கேற்ற அமைப்புகள் தங்களுக்கிடையேயான ஒருங்கிணைந்த செயல்பாடு, விரைவு நடவடிக்கை திறன் மற்றும் அவசரநிலை கையாளும் திறனை வெளிப்படுத்தின.

தொடர்ச்சியான கண்காணிப்பு, அதிகரிக்கப்பட்ட விழிப்புணர்வு மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம், பாதுகாப்பான மற்றும் தடையற்ற விமானப் போக்குவரத்தை உறுதி செய்யும் பணியில் சிஐஎஸ்எஃப் உறுதியாக செயல்பட்டு வருவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு நிறுவனங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் முக்கியப் படையாக விளங்கும் சிஐஎஸ்எஃப், நாடு முழுவதும் உள்ள முக்கிய விமான நிலையங்களின் பாதுகாப்புப் பொறுப்பையும் மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM