Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 மார்ச் (ஹி.ச.)
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி இன்று ஞாயிற்றுக்கிழமை ( மார்ச் 29) சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ், தேமுதிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீட்டை நிறைவுச் செய்து 164 பேர் கொண்ட திமுக வேட்பாளர்கள் பட்டியலை திமுகவின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டிருந்தார்.
இதனிடையே, திமுகவின் துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி தலைமையிலான தேர்தல் அறிக்கை குழு, கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுகவின் தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்திருந்தது. இதையடுத்து, அண்ணா அறிவாலயத்தில் இன்று தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026- க்கான அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், முதல்வருமான மு. க. ஸ்டாலின் பங்கேற்று தேர்தல் அறிக்கை தயாரித்தவர்களை பாராட்டினார். இதைத் தொடர்ந்து, திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை வாசித்து வெளியிட்டார். இதில்,
திமுக தேர்தல் அறிக்கை விவரம்:-
* 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் 19 லட்சம் குழந்தைகளுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தில் வழங்கினோம். இனி கூடுதலாக 15 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம் 8ம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும்.
* மகளிர் உரிமைத்தொகை ரூ. 2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்
* இலவச மின்சாரம் பெறும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு எந்தவித மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சாரப் பம்புசெட்டுகள் வழங்கப்படும்
* தமிழ்நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்
* முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்படுவதற்கான ஆண்டு வருமான வரம்பு ரூ. 5 லட்சமாகவும், காப்பீட்டுத்தொகை ரூ. 10 லட்சமாகவும் உயர்த்தப்படும்
* கல்லூரி மாணவ, மாணவியரின் உயர் கல்வி சேர்க்கையை அதிகரிக்க புதுமைப்பெண் , தமிழ் புதல்வன் திட்டத்தின்படி மாதம் தோறும் வழங்கப்பட்டு வரும் ரூ. 1,000 இனி ரூ. 1,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
* நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,500 ஆகவும், கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ. 4,500 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்
* முதியோர் உதவித்தொகை ரூ. 1,200-லிருந்து ரூ. 2,000 ஆகவும், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ. 1,500-லிருந்து ரூ. 2,500 ஆகவும் உயர்த்தப்படும்.
* வீட்டு உபயோக பொருட்கள் வாங்க இல்லத்தரசிகளுக்கு ரூ. 8 ஆயிரம் மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும். ரூ. 8 ஆயிரம் மதிப்புள்ள இந்த இல்லத்தரசி கூப்பனை பயன்படுத்தி வாஷிங் மெஷின், டிவி, பிரிட்ஜ், மிக்சி, மைக்ரோவேவ் அவன் மற்றும் மின் அடுப்புகள் போன்ற வீட்டு உபயோக பொருட்களை, வருமான வரி செலுத்தாத குடும்பங்களை சேர்ந்த இல்லத்தரசிகள் புதிதாக வாங்கிக்கொள்ளலாம் அல்லது ஏற்கனவே பயன்படுத்தி வரும் பழைய பொருட்களுக்கு மாற்றாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
Hindusthan Samachar / Dr. Vara Prasada Rao PV