தொழில்நுட்பப் பணிகள் தேர்வில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய ஏப்ரல் 6-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சென்னை, 30 மார்ச் (ஹி.ச.) நேர்காணல் இல்லாத பதவிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வில் சான்றிதழ்களை முழுமையாகப் பதிவேற்றம் செய்ய தேர்வர்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டிஎன்ப
TNPSC Announcement.


சென்னை, 30 மார்ச் (ஹி.ச.)

நேர்காணல் இல்லாத பதவிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வில் சான்றிதழ்களை முழுமையாகப் பதிவேற்றம் செய்ய தேர்வர்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் பானோத் ம்ருகேந்தர் லால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வில் (நேர்காணல் இல்லாத பதவிகள்) தேர்வர்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன.

அப்போது சில தேர்வர்கள் ஒரு சில சான்றிதழ்களை முழுமையாகவும், சரியாகவும் பதிவேற்றம் செய்யாமல் குறைபாட்டுடன் வைத்திருப்பது கண்டறியப்பட்டது. எனவே, அத்தகைய தேர்வர்கள் விடுபட்ட சான்றிதழ்களை முழுமையாகப் பதிவேற்றம் செய்யவும், குறைகளை சரிசெய்யவும் ஏப்ரல் 6-ம் தேதி வரை இறுதி வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

அந்த தேர்வர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்களுக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல் வாயிலாக தகவலும் அனுப்பப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாத தேர்வர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b