இன்றும் நாளையும் தமிழகத்தில் பரவலாக வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை, 05 மார்ச் (ஹி.ச) தமிழகத்தில் வியாழன், வெள்ளிக்கிழமை (மார்ச் 5, 6) வெப்ப நிலை உயர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மன்
Meteorological Department information


சென்னை, 05 மார்ச் (ஹி.ச)

தமிழகத்தில் வியாழன், வெள்ளிக்கிழமை (மார்ச் 5, 6) வெப்ப நிலை உயர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகள், அதையொட்டிய பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் (மார்ச் 5, 6) ஆகிய இரு நாள்கள் வட வானிலை நிலவக்கூடும்.

இதனால், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மார்ச் 5, 6 -ஆம் தேதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும். மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (மார்ச் 7) முதல் திங்கள்கிழமை(மார்ச் 10) வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை, புறநகர் பகுதிகளில், வியாழக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் நிலவும்.

பனிமூட்டம்: மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள், தமிழக கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை அதிகாலை லேசான பனிமூட்டம் நிலவும். மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை லேசான பனிமூட்டம் நிலவும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b