Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 05 மார்ச் (H.S.)
புதுச்சேரியில் உள்ள காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் உள்ள பாடல் பெற்ற திருத்தலமாக அறியப்படும் தர்பாரண்யேஸ்வரர் கோயிலில்லானது நளச் சக்கரவா்த்தியின் சனி தோஷத்தை நீக்கியத் தலமாகவும், ஸ்ரீ சனீஸ்வர பகவான் அபய முத்திரையுடன் தனி சந்நிதியில் அருள்பாலிகும் சிறப்பும் கொண்டது.
வாக்கியப் பஞ்சாங்க குறிப்பின்படி கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பர் 20-ஆம் தேதி நடைபெற்ற பெயர்ச்சிக்குப் பின் தற்போது கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு வெள்ளிக்கிழமை காலை 8.24 மணிக்கு பெயா்ச்சியாவதையொட்டி, சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறவுள்ளன.
சனிப்பெயர்ச்சி விழாவில் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் நளன் தீா்த்தக் குளத்துக்கு செல்லும் வழியில் உள்ள வரிசை வளாகத்திலிருந்து கட்டணமில்லாமல் தரிசனம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கட்டண தரிசனமாக ரூ. 300, ரூ. 600, ரூ. 1,000 என நிர்ணயம் செய்து திருநள்ளாறு பகுதியில் பல இடங்களில் டிக்கெட் வழங்கும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஆன்லைன் மூலமாகவும் கோயில் நிா்வாக இணையதளத்தில் பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. சனிப்பெயா்ச்சி நாளான நாளை நாள் முழுவதும் சுவாமி தரிசனம் செய்ய வசதியாக கோயில் நடை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சனிப்பெயர்ச்சி விழாவில் பங்கேற்க இன்று இரவு முதலே பக்தர்கள் வரத்தொடங்குவர் என்பதால், அவர்களுக்கான வசதிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் பாதுகாப்பு பணியில் சுமார் ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர். தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வந்த 200 மத்திய பாதுகாப்பு படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என புதுச்சேரி டி.ஐ.ஜி. சத்திய சுந்தரம் அறிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் பக்தர்களிடம் கெடுபிடி காட்டக் கூடாது என்று காவலர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b