ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்க அமெரிக்கா 'அனுமதிப்பது' சரியா? - காங்கிரஸ் கேள்வி
புதுடெல்லி, 06 மார்ச் (ஹி.ச.) வளைகுடா பகுதியில் போர் அபாயம் உள்ளதால், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து பாதைகளை ஈரான் தடுத்துள்ளது. இதனால், இந்தியா தனது எரிசக்தி தேவைகளை நிறைவேற்ற ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா 30 நா
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்க அமெரிக்கா 'அனுமதிப்பது' சரியா? - காங்கிரஸ் கேள்வி


புதுடெல்லி, 06 மார்ச் (ஹி.ச.)

வளைகுடா பகுதியில் போர் அபாயம் உள்ளதால், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து பாதைகளை ஈரான் தடுத்துள்ளது.

இதனால், இந்தியா தனது எரிசக்தி தேவைகளை நிறைவேற்ற ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா 30 நாட்கள் அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து,அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் இது குறித்து கூறுகையில்,

டிரம்ப் அவர்களின் முயற்சியால் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்ய எண்ணெயை வாங்க 30 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதனால் ரஷ்யாவுக்கு பெரிய அளவில் லாபம் இருக்காது.

அமெரிக்காவுக்கு இந்தியா முக்கியமான நட்பு நாடு. எனவே, இந்தியா அமெரிக்காவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஈரானின் முயற்சியால் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கவே இந்த நடவடிக்கை. என்று கூறினார்.

இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா யார் 'அனுமதிப்பது'? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,

அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் இந்த உத்தரவை பகிர்ந்துள்ளார். மோடி தலைமையிலான அரசு, இந்தியா எங்கிருந்து எண்ணெய் வாங்கலாம் என்பதை அமெரிக்கா தீர்மானிக்கும் நிலைக்கு நாட்டை கொண்டு சென்றுவிட்டது.

இந்த முடிவை இந்திய அரசாங்கமோ, பிரதமரோ எடுக்கவில்லை. இந்தியா எண்ணெய் வாங்க அமெரிக்கா யார் 'அனுமதிப்பது'?

நாங்கள் எந்த நாட்டுக்கும் அடிமையில்லை. நாங்கள் இறையாண்மை உள்ள சுதந்திர நாடு.

ஆனால் மோடி அமெரிக்காவிடம் கேள்வி கேட்க முடியாது. ஏனென்றால் அவர் அமெரிக்க நலனுக்காக நாட்டை அடமானம் வைத்துள்ளார்.

இது வெட்கக்கேடானது!

என்று குறிப்பிட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM