Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 06 மார்ச் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 7 தாலுகா தலைமையகங்களில் வரும் மார்ச் 14-ஆம் தேதி (சனிக்கிழமை) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான ஆர். வசந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தேசிய மற்றும் மாநிலச் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில், மாவட்ட முதன்மை நீதிபதி தலைமையில் இந்த மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 15 அமர்வுகளில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.
தூத்துக்குடியில் 6 அமர்வுகள், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூரில் தலா 2 அமர்வுகள், விளாத்திகுளம், சாத்தான்குளம், ஓட்டப்பிடாரத்தில் தலா 1 அமர்வு நடைபெறும்.
இந்த மக்கள் நீதிமன்றத்தில் சமாதானமாகச் செல்லக்கூடிய குற்றவியல் வழக்குகள், அனைத்து வகையான சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், காசோலை மோசடி மற்றும் வங்கி கடன் தொடர்பான வழக்குகள் மணவாழ்க்கை சம்பந்தப்பட்ட (குடும்ப நல) வழக்குகள் சமரசத் தீர்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
எனவே, இந்தத் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வழக்காளிகள், எதிர் வழக்காளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது வழக்குகளுக்கு விரைந்து தீர்வு கண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b