Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 07 மார்ச் (ஹி.ச.)
மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச் சாலையாக (என்.ஹெச்744) தரம் உயர்த்தும் பணிகள் ரூ.1,318 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, 2023 மார்ச் மாதம் தொடங்கியது.
இதில் திருமங்கலம்-வடுகப்பட்டி (36 கி.மீ), வடுகபட்டி - ராஜபாளையம் (35.6 கி.மீ) 2 பிரிவுகளாக பிரித்து பணிகள் நடைபெற்று வருகிறது.
வடுகப்பட்டி - ராஜபாளையம் பிரிவில் கிருஷ்ணன்கோவில் வரை தற்போதைய சாலையே நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய நாகர்கோவில் மண்டல அதிகாரிகள் கூறியதாவது:
மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் தொடர் விபத்துகள் ஏற்படும் அதிக கரும்புள்ளி பகுதிகள் உள்ள நிலையில், நான்கு வழிச் சாலையில் விபத்துகளை தவிர்க்கும் வகையில் சென்டர் மீடியன் கிராஸிங் இல்லாமல், ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு கண்காணிப்பு கேமரா அமைத்து நவீன போக்குவரத்து மேலாண்மை அமைப்பு மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த அமைப்பு டோல்கேட்டில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும்.
இதன்மூலம் விபத்து ஏற்பட்டால் தேவையான அனைத்து உதவிகளும் உடனடியாக மேற்கொள்ளப்படும்.
இந்த சாலையில் உள்ள அனைத்து குறுக்கு சாலைகளிலும் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
சென்டர் மீடியன் கிராஸிங் இல்லாததால் 2 கிலோ மீட்டருக்கு ஒரு குறுக்கு பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.
ராஜபாளையம் அருகே எஸ்.ராமலிங்காபுரம் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
ஓராண்டுக்கு முன்னரே முடிய வேண்டிய பணிகள், ரயில்வே மேம்பால அனுமதி தாமதத்தால்தாமதம் ஆகிவிட்டது.
நத்தம்பட்டி டோல்கேட் ஏப்ரலில் திறக்கப்பட்டு, சாலை முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் வரை குறைவான கட்டணம் வசூல் செய்யப்படும். கட்டணம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.
இந்த சாலையில் 8 இடங்களில் சாலையின் அனைத்து தகவல்கள், உதவி எண்கள் அடங்கிய கியூஆர் கோடு வைக்கப்பட உள்ளது.
சாலையில் பாலம் மற்றும் அணுகுசாலை உள்ள பகுதியில் 16 கி.மீ. தொலைவுக்கு மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் சோதனை முயற்சியாக 2 கிலோ மீட்டருக்கு பிளாஸ்டிக் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 15-ல் இந்த சாலை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும். திருமங்கலம்-வடுகபட்டி இடையேயான சாலை ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
இந்த சாலையில் அதிகபட்சமாக 100 கிலோ மீட்டர் வேகம் வரை பயணிக்கலாம்.
இந்த சாலை முழுமையாக பயன்பாட்டுக்கு வந்தால் மதுரை-ராஜபாளையம் பயண நேரம் 1 மணி நேரமாக குறையும். அடுத்த கட்டமாக ராஜபாளையம்-புளியரை இடையே 70 கி.மீ. தொலைவுக்கு நான்குவழிச்சாலை அமைக்கும் பணிகள் ஓராண்டுக்குள் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b