Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 09 மார்ச் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மற்றும் புதூர் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வழிகாட்டுதலின் கீழ் 'விளாத்திகுளம் புதூர் பயிர் உற்பத்தியாளர்கள் கம்பெனி' தொடங்கப்பட்டது.
இதில் ஏராளமான விவசாயிகள் தங்களின் உழைப்பின் மூலம் ஈட்டிய பணத்தை முதலீடு செய்திருந்தனர்.
இந்நிலையில், விவசாயிகளிடம் வசூல் செய்யப்பட்ட சுமார் ரூ.1.5 கோடிக்கும் மேலான தொகை, நிறுவனத்தின் வங்கி கணக்கில் செலுத்தப்படாமல் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
இந்த மோசடிக்கு நிறுவனத்தின் சி.இ.ஓஜெகதீஸ்வரன் மற்றும் அவரது மனைவி பவித்ரா உள்ளிட்ட நிர்வாகிகள் முக்கியக் காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் இன்று மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர்.
அவர் கொடுத்த புகார் மனுவில், நிறுவனத்தின் சி.இ.ஓ ஜெகதீஸ்வரன், அவரது மனைவி பவித்ரா, மற்றும் நிர்வாகிகள் பரமசிவம், தர்மலிங்கம், சுப்புலட்சுமி, சுதா ராணி ஆகியோர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மோசடியில் ஈடுபட்டவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வேண்டும். விவசாயிகள் இழந்த பணத்தை முழுமையாகத் திரும்பப் பெற்றுத் தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அடுத்தகட்டப் போராட்டங்களில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b