Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 09 மார்ச் (ஹி.ச.)
கடந்த ஜனவரி 28ம் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் கடந்த மாதம் 2ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் முதற்கட்ட அமர்வு கடந்த 13-ம் தேதி வரை நடைபெற்றது.
இந்நிலையில், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடியது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ம் கட்ட அமர்வு இன்று முதல் அடுத்த மாதம் 2-ம் தேதி வரை நடை பெற உள்ளது.
இன்று (மார்ச் 09) காலை 11 மணிக்கு அவை தொடங்கியதும் லோக்சபாவில் மறைந்த எம்பிக்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு ஒத்திவைக்கப்பட்டது.
ராஜ்யசபாவில் டி-20 கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற இந்திய அணியினருக்கு அவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார்.
தொடர்ந்து மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் அதனால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை ஜெய்சங்கர் தாமாக முன்வந்து விளக்கம் அளித்தார்.
மாநிலங்களவையில் ஜெய்சங்கர் கூறியதாவது,
இந்திய நுகர்வோரின் நலனே மத்திய அரசின் முக்கியத்துவம். நாட்டின் எரிசக்தி பாதுகாப்புக்கே மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழ்நிலை கச்சா எண்ணெய் எரிபொருள் விநியோகம், உலகளாவிய வணிக சங்கிலியில் பாதிப்பை ஏற்படுத்தும்.
மத்திய கிழக்கு பதற்றத்தை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்த பதற்றம் இந்திய பொருளாதாரம் மற்றும் விநியோக சங்கிலியில் ஏற்படுத்தும் பாதிப்பையும் ஆராய்ந்து வருகிறோம். போர் பதற்றத்தை பேச்சுவார்த்தை, ராஜாங்க ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி நிலைக்கு கொண்டுவர வேண்டும்.
மத்திய கிழக்கில் நிலைத்தன்மை என்பது சர்வதேச எரிசக்தி சந்தைக்கும் , இந்திய பொருளாதாரத்திற்கும் மிகவும் முக்கியம். மத்திய கிழக்கு அமைதியாகவும், நிலைத்தன்மையுடனும் இருக்க வேண்டும்.
மத்திய கிழக்கில் வசித்து வரும் இந்தியர்களின் பாதுகாப்பு, நலனிலும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.
போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து 67 ஆயிரம் இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b