நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
புதுடெல்லி, 09 மார்ச் (ஹி.ச) நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 28ம் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 2ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதற்கட்ட அமர்வு கடந்த 13-ம் தே
Opposition parties protest at Parliament premises


புதுடெல்லி, 09 மார்ச் (ஹி.ச)

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 28ம் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது.

இதனை தொடர்ந்து கடந்த மாதம் 2ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதற்கட்ட அமர்வு கடந்த 13-ம் தேதி வரை நடைபெற்றது.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ம் கட்ட அமர்வு இன்று காலை 11 மணி அளவில் கூடியது.

இன்று முதல் அடுத்த மாதம் 2ம் தேதி வரை இக்கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

காலை 11 மணிக்குக் கூடிய மக்களவை மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு நண்பகல் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் ஜெகதாம்பிகா பால் தலைமையில் மக்களவை 12 மணிக்குக் கூடியது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றதற்கு ஜெகதாம்பிகா பால் வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர், அவர் கேள்வி - நேரத்தை தொடங்கினார். இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேற்கு ஆசிய போர் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அமளிக்கு மத்தியில், மேற்கு ஆசிய போர் குறித்த அறிக்கையை அளிக்க வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஜெகதாம்பிகா பால் அனுமதி அளித்தார்.

அப்போது எதிர்க்கட்சி எம்பிக்கள், விவாதம் வேண்டும், விவாதம் வேண்டும் என வலிறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

மேலும், ஜெகதாம்பிகா பால் இருக்கையை சூழ்ந்து கொண்டு எதிர்க்கட்சி எம்பிக்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனால், அவையை 3 மணிக்கு ஒத்திவைத்து ஜெகதாம்பிகா பால் உத்தரவிட்டார்.

இந்நிலையில், மாநிலங்களவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,

மேற்கு ஆசியாவின் புவிசார் நிலைமை காரணமாக இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்புக்கு மிகப் பெரிய சவால் ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்த விவகாரம் குறித்து குறுகிய விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும். இந்த மோதல் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. சமையல் எரிவாயுவின் விலையும் உயர்ந்துள்ளது.

வளைகுடா நாடுகளில் ஒரு கோடி இந்தியர்கள் வசிக்கிறார்கள். எனவே, இதில் அவர்களின் பாதுகாப்பும் வாழ்வாதாரமும் அடங்கி இருக்கிறது. எனவே, இந்த விவகாரம் குறித்து விதி எண் 176-ன் கீழ் விவாதம் நடத்தப்பட வேண்டும்.

என்று வலியுறுத்தினார்.

அதற்கு அனுமதி மறுத்த அவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், இது குறித்து விவாதித்து முடிவெடுக்கலாம். இப்போது இதற்கு அனுமதி அளிக்க முடியாது என்று கூறி, இந்த விவகாரம் குறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது அறிக்கையை அளிக்க அனுமதி அளித்தார்.

இதையடுத்து, மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போரை அடுத்து, அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் விளக்க முயன்றார்.

ஜெய்சங்கரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் விவாதம் நடத்த வலியுறுத்தியும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளிக்கு மத்தியில் ஜெய்சங்கர் தனது உரையை வாசித்தார். இதனால் அதிருப்தி அடைந்த எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர், நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கூறியதாவது,

இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஏனெனில், இது மிகவும் முக்கியமான பிரச்சினை. நாடு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

நமது எரிசக்தி பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது. இன்று காலை கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலருக்கு மேல் உயர்ந்துள்ளது. கத்தார் நாட்டில் இருந்து எரிவாயு விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் கடுமையான நெருக்கடியை அறிவித்துள்ளனர்.

அந்த பக்கத்தில் இருந்து நமது தொழிற்சாலைகளுக்கு எரிவாயு வருவதில்லை. கிழக்கில் இருந்து நாம் இவற்றைப் பெற முடியும். எனவே நாம் சமாளிக்க முயல்வோம்.

ஆனால், நிச்சயம் நாம் பாதிக்கப்பட்டுள்ளோம். விலைகள் உயர்ந்து வருகின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b