Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 10 ஏப்ரல் (ஹி.ச.)
பிஹாரில் சுமார் 20 ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்த ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் மத்திய அரசியலுக்கு செல்ல முடிவு செய்தார்.
இதையடுத்து கடந்த மார்ச் 16-ம் தேதி நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார். இதன் தொடர்ச்சியாக கடந்த மார்ச் 30-ம் தேதி சட்ட மேலவை உறுப்பினர் (எம்எல்சி) பதவியை ராஜினாமா செய்தார்.
முதல்வர் பதவியை இன்னும் ராஜினாமா செய்யாத நிதிஷ் குமார், மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்பதற்காக நேற்று பாட்னாவில் இருந்து புதுடெல்லி வந்தார்.
இன்று, மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், தனது அறையில் நடைபெற்ற ஒரு எளிய விழாவில், நிதிஷ் குமாருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்தி மொழியில் நிதிஷ் குமார் உறுதிமொழியை எடுத்துக்கொண்டார்.
இந்த நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுள்ள நிதிஷ்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,
நிதிஷ்குமார் நாட்டின் மிகவும் அனுபவம் வாய்ந்த தலைவர்களில் ஒருவர். நல்லாட்சிக்கான அவரது அர்ப்பணிப்பு எல்லா இடங்களிலும் பாராட்டப்பட்டுள்ளது. பீகாரின் வளர்ச்சியில் அவர் அழியாத பங்களிப்பை செய்துள்ளார்.
அவரை மீண்டும் பாராளுமன்றத்தில் பார்க்கும் அனுபவம் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். பாராளுமன்ற உறுப்பினராகவும், மத்திய மந்திரியாகவும் அவர் பல ஆண்டுகள் சேவையாற்றியுள்ளார்.
அவரது நீண்ட அரசியல் அனுபவத்தால் பாராளுமன்றத்தின் மரியாதை மேலும் உயரும் என்று எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுள்ள நிதிஷ்குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b