நவாஸ் கனி வெற்றியை எதிர்த்த வழக்கு- வாபஸ் பெற அரசிதழ் அறிவிப்பு வெளியிட உத்தரவு
சென்னை, 10 ஏப்ரல் (ஹி ச.) ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ் கனி அவர்களின் தேர்தல் வெற்றியை எதிர்த்து, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த தேர்தல் வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முக்கியமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Navas


சென்னை, 10 ஏப்ரல் (ஹி ச.)

ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ் கனி அவர்களின் தேர்தல் வெற்றியை எதிர்த்து, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த தேர்தல் வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முக்கியமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், மனுதாரரான ஓ. பன்னீர்செல்வம் தரப்பில், தேர்தல் மனுவை வாபஸ் பெற விருப்பம் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தேர்தல் மனுவை வாபஸ் பெறுவது தொடர்பான சட்ட நடைமுறைகள் குறித்து தேர்தல் ஆணையம் தனது நிலைப்பாட்டை விளக்கியது.

தேர்தல் ஆணையம் தரப்பில், தேர்தல் மனுவை திரும்பப்பெற விரும்பினால், அது பொதுநலனுடன் தொடர்புடைய விஷயம் என்பதால், இதற்கு எதிராக யாரேனும் ஆட்சேபனை தெரிவிக்க விரும்பினால் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டது. அதற்காக, அரசிதழில் (Gazette) அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும், அந்த அறிவிப்பின் மூலம் பொதுமக்களிடமிருந்து அல்லது தொடர்புடையவர்களிடமிருந்து ஆட்சேபனைகள் பெறப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதத்தை பரிசீலித்த நீதிபதிகள், தேர்தல் ஆணையம் கூறிய நடைமுறைகளை ஏற்று, ஓ. பன்னீர்செல்வம் தரப்புக்கு அரசிதழில் அறிவிப்பு வெளியிட உத்தரவிட்டனர். அதன்பிறகு, கிடைக்கும் ஆட்சேபனைகள் மற்றும் அதன் அடிப்படையில் வழக்கை வாபஸ் பெற அனுமதி வழங்குவது குறித்து நீதிமன்றம் முடிவு செய்யும் எனவும் கூறப்பட்டது.

இந்த வழக்கின் மேலான விசாரணையை ஜூன் 5ஆம் தேதிக்கு தள்ளிவைத்து, அதற்குள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ