Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஏப்ரல் (ஹி.ச)
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 2ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரையிலும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 3ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற்றது.
அதேபோல், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 11 தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற்றது.
1 முதல் 5ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 6 முதல் 16ஆம் தேதி வரையிலும், 6 முதல் 9ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 1 முதல் 16ஆம் தேதி வரையிலும் தேர்வு நடைபெறவுள்ளது.
இந்நிலையில், தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்படும் தேதியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
அரசு, அரசு உதவிப்பெறும், தனியார் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பள்ளி இறுதித் தேர்வுகள் ஏப்ரல் 16 அன்று நிறைவடைகின்றன. எனவே ஏப்ரல் 17 முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்படுகிறது.
இதனிடையே, ஏப்ரல் 25ஆம் தேதி வரை அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை கையாளும் ஆசிரியர்கள் உட்பட அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வந்து விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள், வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை உள்ளிட்ட நிர்வாகப் பணிகள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரால் வழங்கப்பட்ட தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
2026-27ம் புதிய கல்வியாண்டில் ஜூன் 1 (திங்கள்கிழமை) முதல் அனைத்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கப்படும்
வரும் கல்வியாண்டு முதல் 1 முதல் 3ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு புதிய பாடப்புத்தகம் அறிமுகப்படுத்தப்படுவதால் மேற்கண்ட வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு 1.6.2026 முதல் 3.6.2026 வரை மாவட்ட அளவில் பணியிடைப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
எனவே, 1 முதல் 3ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் 4.6.2026 (வியாழக்கிழமை) அன்று முதல் பள்ளிகள் வகுப்புகள் தொடங்கப்படும்.
பிற வகுப்புகளுக்கு ஜூன் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும். அன்றைய தினம் மாணவர்களுக்கு புதிய பாட புத்தகங்கள் வழங்கப்படும்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b