Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 10 ஏப்ரல் (ஹி.ச.)
ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள பரமக்குடி, ஆன்மீகம், கலை மற்றும் நெசவுத் தொழிலுக்குப் பெயர் பெற்ற ஒரு முக்கியமான நகரமாகும்.
பரமக்குடி மற்றும் அதன் புறநகர் பகுதியான எமனேஸ்வரம், உயர்தர கைத்தறி பருத்தி மற்றும் பட்டுச் சேலைகளுக்குப் புகழ்பெற்றவை. சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்திலிருந்து குடிபெயர்ந்த சௌராஷ்டிர சமூகத்தினர் இந்த நெசவுத் தொழிலை இங்கு வளர்த்தனர்.
இங்கு தயாரிக்கப்படும் சேலைகள் அவற்றின் உறுதிக்கும், பாரம்பரிய வேலைப்பாடுகளுக்கும் பெயர் பெற்றவை.
இங்கு பல பழமையான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்கள் உள்ளன.
மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவைப் போலவே, இங்குள்ள சுந்தரராஜ பெருமாள் கோயிலில் அழகர் ஆற்றில் இறங்கும் விழா மிக விமரிசையாக நடைபெறும்.
இங்குள்ள மக்களால் மிகவும் போற்றப்படும் தெய்வமான முத்தாலம்மன் கோயில் நகரின் மையத்தில் அமைந்துள்ளது.
எமன் இங்கிருந்து சிவபெருமானை வழிபட்டு மீண்டும் தனது பதவியைப் பெற்றதாகக் கூறப்படும் புராணப் பெருமை கொண்ட எமனேஸ்வரமுடையார் கோயில் இங்கு உள்ளது.
இவை தவிர, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களும் இணைந்து மத நல்லிணக்கத்திற்குச் சான்றாக உள்ளன.
1952-ல் தொடங்கப்பட்ட வேளாண் ஆராய்ச்சி நிலையம், வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய நெல் ரகங்கள் (குறிப்பாக 'அண்ணா 4') மற்றும் குண்டு மிளகாய் ரகங்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
சுற்றியுள்ள கிராமங்களுக்கு இது ஒரு முக்கியமான வணிக மையமாகத் திகழும் பரமக்குடி வாராந்திர சந்தை இங்கு மிகவும் பிரபலம்.
இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சீயான் விக்ரம் ஆகியோர் பரமக்குடியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடிய தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவிடம் இங்கு அமைந்துள்ளது
வாக்காளர்கள் எண்ணிக்கை
2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலின்படி, பரமக்குடி (தனி) சட்டமன்றத் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,33,433 ஆகும்.
வாக்காளர்களின் விவரம் பின்வருமாறு:
ஆண்கள்: 1,15,701
பெண்கள்: 1,17,714
மூன்றாம் பாலினத்தவர்: 18
மொத்த வாக்காளர்கள்: 2,33,433
2024 (நாடாளுமன்றத் தேர்தல்): 2,54,387 வாக்காளர்கள்.
2021 (சட்டமன்றத் தேர்தல்): 2,55,654 வாக்காளர்கள்.
இத்தொகுதியில் மொத்தம் 303 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பரமக்குடி வேட்பாளர்கள் நிலவரம்
பரமக்குடி (தனி) சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ செ. முருகேசன் (திமுக) ஆவார். இவர் 2021-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தற்போது பதவியில் உள்ளார்.
தற்போதைய தேர்தலில் திமுக சார்பில் பி.ஏ., பி.எல். பட்டதாரியான கே.கே. கதிரவன் போட்டியிடுகின்றார்.
அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் எஸ். முத்தையா வேட்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.
கல்வி நிறுவன இயக்குநர் கோ. கோபிராஜன் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் களம் காண்கிறார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் பல் மருத்துவர் ஆர். எழில் இளவரசி இத்தேர்தலில் போட்டியிடுகின்றார்.
புதிய தமிழகம் கா. ரத்தின பிரகாஷ் பாண்டியன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
பரமக்குடி ஒரு தனித் தொகுதி (Reserved Constituency) என்பதால், இங்குள்ள தலித் சமூக வாக்குகளும், வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கும் தேவர் மற்றும் சௌராஷ்டிர சமூக வாக்குகளும் மிக முக்கியமானவை.
மக்களின் எதிர்பார்ப்புகள்
பரமக்குடி மற்றும் எமனேஸ்வரம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் கைத்தறி நெசவை நம்பி உள்ளன.
நூல் விலை ஏற்றத்தைத் தடுத்து, மானிய விலையில் தரமான நூல்கள் கிடைக்க வழிவகை செய்தல்.
இப்பகுதியில் ஒருங்கிணைந்த கைத்தறிப் பூங்கா அமைப்பதன் மூலம் உற்பத்தியைப் பெருக்கி, நவீனச் சந்தை வாய்ப்புகளை உருவாக்குவது.
நலிவடைந்து வரும் நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு நிதி உதவி அளித்து புத்துயிர் ஊட்ட வேண்டும்.
என்பன போன்ற கோரிக்கைகள் நெசவாளர்கள் முன்வைத்துள்ளனர்.
வைகை ஆற்றில் இருந்து முறையாகப் பாசனத்திற்குத் தண்ணீர் திறப்பதை உறுதி செய்ய வேண்டும்
இத்தொகுதியில் உள்ள கண்மாய்கள் மற்றும் குளங்களைத் தூர்வாரி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
இப்பகுதியின் முக்கியப் பயிரான குண்டு மிளகாயைப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கக் குளிர்பதனக் கிடங்குகள் (Cold Storage) அமைக்க வேண்டும் என இப்பகுதி விவசாய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரமக்குடி நகரின் மையப்பகுதியில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேம்பாலங்கள் அல்லது மாற்றுப் பாதைகளை அமைக்க வேண்டும்.
பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையத்தை உருவாக்க வேண்டும்
50 ஆண்டுகளுக்கும் மேலாக நகராட்சி எல்லை விரிவுபடுத்தப்படாத நிலையில், எல்லைகளைத் துரிதமாக விரிவுபடுத்த வேண்டும் .
ஏழை மாணவர்கள் உயர் கல்வி பயில வசதியாகப் பரமக்குடியில் ஒரு புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும்.
இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பிழைப்பு தேடி வெளியூர்களுக்குச் செல்வதைத் தவிர்க்க, சிறு மற்றும் குறுந்தொழில்களை ஊக்குவிக்கும் தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும்
என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b