Enter your Email Address to subscribe to our newsletters

ஹைதராபாத் , 10 ஏப்ரல் (ஹி.ச.)
ஹைதராபாத் நகரில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. திருமணத்திற்கு மறுத்ததால், காதலன் தனது எச்ஐவி பாதிக்கப்பட்ட இரத்தத்தை இளம்பெண்ணின் உடலில் சிரிஞ்ச் மூலம் செலுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால், அந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
ஜங்காம் மாவட்டத்தை சேர்ந்த மனோஹர் (24) மற்றும் 20 வயது இளம்பெண் இருவரும் சிறுவயது முதல் காதலித்து வந்தனர்.
இரு குடும்பங்களின் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் திருமணத்திற்கு முன் நடந்த மருத்துவ பரிசோதனையில், மனோஹருக்கு எச்ஐவி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து இளம்பெண்ணின் குடும்பம் திருமணத்தை ரத்து செய்தது.இதனால் கோபமடைந்த மனோஹர், பழிவாங்க திட்டமிட்டார்.
இளம்பெண்ணுக்கும் எச்ஐவி பரவினால், பின்னர் அவளைத் திருமணம் செய்யலாம் என எண்ணிய அவர், கடந்த மாதம் 11ஆம் தேதி சிரிஞ்சில் தனது இரத்தத்தை எடுத்து, இளம்பெண் வீட்டிற்கு சென்றார்.
மீண்டும் திருமணம் குறித்து கேட்டபோது, இளம்பெண் மறுத்ததால், பலவந்தமாக அந்த இரத்தத்தை அவளது உடலில் செலுத்திவிட்டு தப்பினார்.
இந்த சம்பவம் குறித்து இளம்பெண்ணின் தந்தை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் மனோஹர் கைது செய்யப்பட்டு ரிமாண்டுக்கு அனுப்பப்பட்டார்.
இதற்கிடையில் ஏற்பட்ட கடும் மன உளைச்சலை தாங்க முடியாமல், பி.டெக் படித்து வந்த இளம்பெண் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA