குடிநீர் அனைவருக்கும் கட்டணமின்றி வழங்கப்படும் - சீமான் வாக்குறுதி
தூத்துக்குடி, 11 ஏப்ரல் (ஹி.ச.) தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில், நாம் தமிழர் கட்சி சார்பில் 2வது முறையாக பாலாஜி ராமச்சந்திரன் போட்டியிடுகின்றார். இவரை ஆதரித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தீவிரப்
குடிநீர் அனைவருக்கும் கட்டணமின்றி வழங்கப்படும் - சீமான் வாக்குறுதி


தூத்துக்குடி, 11 ஏப்ரல் (ஹி.ச.)

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில், நாம் தமிழர் கட்சி சார்பில் 2வது முறையாக பாலாஜி ராமச்சந்திரன் போட்டியிடுகின்றார். இவரை ஆதரித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பாகத் திறந்த வெளி வாகனத்தில் நின்றபடி, சீமான் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

பிரசாரத்தின் போது சீமான் பேசியதாவது:

நாங்கள் மக்களுடன் மட்டும்தான் கூட்டணி வைத்திருக்கிறோம். 20 கட்சிகளைச் சேர்த்து வைப்பது பெரிய கட்சி அல்ல; எத்தனை பேர் எதிர்த்து நின்றாலும் தனித்து நிற்பவனே வீரன். நேர்மையாளன் எப்போதும் தனித்துதான் வருவான். 60 ஆண்டுகள் ஆட்சி செய்தவர்கள், ஒரு தொகுதிக்காகக் கூட மற்றவர்களிடம் கையேந்துவது ஏன்?

அதிமுக ஆட்சிக்கு வந்தால் 10,000 தருகிறேன் என்கிறார்கள், திமுக 2,500 தருகிறேன் என்கிறது. தாலிக்குத் தங்கம், மிக்ஸி, கிரைண்டர் என இலவசம் கொடுப்பதுதான் வளர்ச்சியா? உங்கள் பிள்ளைகள் தாங்களாகவே இவற்றை வாங்கிக்கொள்ளும் அளவிற்கு வேலைவாய்ப்பை உருவாக்குபவனே உண்மையான தலைவன்.

அண்டை மாநிலமான கேரளாவையும், சிங்கப்பூரையும் ஒப்பிட்டுப் பாருங்கள் அங்கு ஓட்டுக்குக் காசு கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. தரமான கல்வி மற்றும் மருத்துவமே அங்கு முன்னுரிமை.

கள்ளச்சாராயம் குடித்துச் சாவது குற்றம் என்கிறது சட்டம். ஆனால், குடித்துச் செத்தவனுக்கு 10 லட்சம் கொடுத்து ஊக்கப்படுத்துகிறது இந்த அரசு. இதை மக்கள் ஏற்கிறீர்களா? எல்லையில் நின்று நாட்டைக் காக்கும் ராணுவ வீரன் உயிரிழந்தால் ஒரு ரூபாய் கூடத் தராத இந்த அரசு, ஒரு நடிகரைப் பார்க்கச் சென்று கூட்ட நெரிசலில் சிக்கிப் பலியானவர்களுக்கு 12 லட்சம் வழங்குகிறது. இது என்ன மாதிரியான நீதி?

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற வேண்டும் என்ற நிலை உருவாக்கப்படும். கல்வி மற்றும் மருத்துவம் முழுமையாகக் கட்டணமில்லாமல் வழங்கப்படும்.

உயிர் ஆதாரமான குடிநீர் அனைவருக்கும் கட்டணமின்றி வழங்கப்படும். மற்ற அனைத்துச் சேவைகளும் தட்டுப்பாடின்றி, மிகத் தரமான முறையில் கட்டணத்துடன் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் பிரச்சாரத்தின் போது, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சில கிராமங்கள் வரைபடத்தில் இருந்தே காணாமல் போய்விட்டதாகச் சீமானிடம் முறையிட்டனர்.

அதற்குப் பதிலளித்த அவர், இப்படியே விட்டால் இன்னும் சில நாட்களில் விளாத்திகுளமே காணாமல் போய்விட்டது என்று சொல்லும் நிலை ஏற்படும். இந்த அவலத்தைத் தடுக்க 'விவசாயி' சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று கூறினார்.

Hindusthan Samachar / vidya.b