அதிமுக வேட்பாளர் முன்னிலையில் களேபரம் - நிலக்கோட்டையில் பரபரப்பு
திண்டுக்கல், 11 ஏப்ரல் (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் தேன்மொழி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதே தொகுதியில் கடந்த 2006,2019 இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்ற இவர், 2021 சட்டமன்றத் தேர்தலிலும் போட
Nilakkottai


திண்டுக்கல், 11 ஏப்ரல் (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் தேன்மொழி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதே தொகுதியில் கடந்த 2006,2019 இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்ற இவர், 2021 சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு மூன்று முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார்.

இந்த சூழலில், நிலக்கோடட்டை சட்டமன்றத் தொகுதியில் இந்த முறையும் தேன்மொழிக்கு அதிமுக சீட் கொடுத்துள்ளது. எனினும், அவர் சற்று தாமதமாகவே தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.

அந்த வகையில், நிலக்கோட்டையின் கிழக்கு பகுதியான ஊத்துப்பட்டி, காமலாபுரம்,அழகம்பட்டி,செம்பட்டி, மெட்டூர் ஆகிய பகுதிகளில் தேன்மொழி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது காமலாபுரம் அருகே மெட்டூர் கிராமத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தேன்மொழியிடம் பொதுமக்கள் இருவர் கேள்வியெழுப்பினர்.

நிலக்கோட்டையில் கடந்த 15-ஆண்டுகளாக அதிமுக தான் வெற்றி பெற்றுள்ளது. அதிலும் நீங்கள்தான் தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்றிருக்கிறீர்கள்.

ஆனால் எங்கள் கிராமத்து சாலை 15 ஆண்டுகளாகவே குண்டும் குழியுமாகத்தான் உள்ளது.

குடிநீர் பற்றாக்குறையும் இருக்கிறது. பலமுறை இந்த பிரச்சனைகளை உங்களிடம் சொல்லியும், நீங்கள் கண்டுகொள்ளாமல் இருக்கிறீர்களே? என அவர்கள் கேள்வியெழுப்பினர்.

இதனால் ஆத்திரமடைந்த அதிமுக நிர்வாகிகள், கேள்வியெழுப்பியவர்களை அடித்து உதைத்தனர்.

அப்போது ஒருவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதனைக் கண்ட அங்கிருந்த பெண்கள் கூச்சலிட்டு, அதிமுக நிர்வாகிகளை அங்கிருந்து விரட்டினர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .

ஆனால், இவை எல்லாம் தன் கண் முன்பே நடைபெற்ற போதிலும், தேன்மொழி அதனை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது.

அப்போது இந்த ஊருக்கு எப்போது வந்தாலும் சண்டையில் தான் முடிகிறது என தேன்மொழி கூறினார்.

இதன் தொடர்ச்சியாக, காமலாபுரம் பிரிவில் அவர் பிரச்சாரம் மேற்கொண்ட போது, பொதுமக்கள் பிரச்சார வாகனத்தை சூழ்ந்து கொண்டு கேள்வியெழுப்பினர்.

இங்கு குடிநீர் 15 நாட்களுக்கு ஒரு முறை தான் வருகிறது. இதுதொடர்பாக பலமுறை உங்களிடம் சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என பொதுமக்கள் அவரிடம் சரமாரியாக கேள்வியெழுப்பினர்.

அப்போது தேன்மொழி அருகே இருந்த அதிமுக நிர்வாகிகள், கடந்த 5 ஆண்டுகளாக எங்கள் ஆட்சி நடக்கவில்லை; திமுக ஆட்சிதான் நடக்கிறது என மழுப்பலாக பதில் அளித்தனர்.

இதனை ஏற்காத பொதுமக்கள், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பிரச்சாரத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு தேன்மொழி கிளம்பினார்.

Hindusthan Samachar / ANANDHAN