Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 12 ஏப்ரல் (ஹி.ச.)
திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (அஇஅதிமுக) சார்பில் போட்டியிடும் ராஜன் செல்லப்பாவை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது அவர், கடந்த 5 ஆண்டுகளாக தமிழக மக்கள் சந்தித்த இன்னல்களுக்கு திமுக ஆட்சியே காரணம் என குற்றம்சாட்டி, அந்த ஆட்சியை அகற்றும் நோக்கில் தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
ராஜன் செல்லப்பா குறித்து பேசும்போது, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற அனுபவம் கொண்ட மூத்த அரசியல் தலைவர் எனக் குறிப்பிடிய அவர், தொகுதி மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றி வருபவர் என்றும் பாராட்டினார். அவரின் வெற்றி ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
திருப்பரங்குன்றத்தில் ஏற்பட்ட பதற்ற நிலைக்கு திமுகவே காரணம் என குற்றம்சாட்டிய அண்ணாமலை, தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாததையும் விமர்சித்தார். தீபத்தூண் குறித்து திமுக பல்வேறு முரண்பட்ட விளக்கங்கள் அளித்ததாகவும் அவர் கூறினார்.
மேலும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பில் திமுக அரசு தாமதம் ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டிய அவர், நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் ஏற்பட்ட தாமதத்தால் திட்டச் செலவு அதிகரித்ததாக தெரிவித்தார். இந்தாண்டு இறுதிக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை பயன்பாட்டிற்கு வரும் என்றும் அவர் கூறினார்.
வரும் 23ஆம் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் ராஜன் செல்லப்பாவை பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என மக்களிடம் அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.
திருப்பரங்குன்றத்தின் வளர்ச்சி தொடரவும், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி மலரவும் மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Hindusthan Samachar / P YUVARAJ