இரண்டாவது நாளாக தொடரும் முதியோர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு
சென்னை, 12 ஏப்ரல் (ஹி.ச) தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்று திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு நேற்று முதல் தொடங்கியது.
Postal voting for the elderly


சென்னை, 12 ஏப்ரல் (ஹி.ச)

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்று திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு நேற்று முதல் தொடங்கியது.

தபால் வாக்கு அளிக்க விண்ணப்பித்தவர்களிடம் வாக்குச்சாவடி அலுவலர்கள் நேரில் சென்று வாக்குகளைப் பெறுகின்றனர். பாதுகாப்புப் பணியில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சிறப்புத் தபால் வாக்குப்பதிவு மூன்று நாட்களுக்கு நடைபெறும். இன்று 2வது நாளாக தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றது.

தகுதியுள்ள வாக்காளர்கள் படிவம் 12D மூலம் விண்ணப்பித்து, தேர்தல் ஆணையத்தின் மூலம் வீட்டிலிருந்தே அல்லது பிரத்யேக மையங்களில் (PVC) வாக்களிக்கலாம்.

சம்பந்தப்பட்ட சட்டப் பேரவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர்களால் பகுதிவாரியாக அமைக்கப்பட்டுள்ள அலுவலர் குழுவானது, ஏற்கெனவே பகுதிவாரியாக தயாரிக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலுடன் தபால் வாக்கு பதிவு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்படி குழுவானது வாக்காளர் 12டி படிவத்தில் தெரிவித்துள்ள முகவரிக்கு வருவது தொடர்பாக, வாக்காளர்களுக்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, 12டி விண்ணப்பம் அளித்து தபால் வாக்கு செலுத்திட விருப்பம் தெரிவித்துள்ள 85 வயதுக்குமேல் உள்ள மூத்த வாக்காளர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், அவர்கள் விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள முகவரியில் இருக்குமாறும், வீட்டுக்கு வரும் குழுவினரிடம் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காட்டி தபால் வாக்குச்சீட்டை பெற்று எவருடைய வற்புறுத்தலுமின்றி வாக்கைப் பதிவு செய்து அங்கே கொண்டுவரப்படும் வாக்குப்பெட்டியில் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த செயல்முறை, அந்தந்த வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில், ரகசியத்தன்மை காக்கப்பட்டு, வீடியோ பதிவுடன் (Videography) நடைபெறுகிறது. EVM இயந்திரங்களில் வாக்குகள் எண்ணப்படுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக தபால் வாக்குகள் எண்ணப்படும்.

ஏப்ரல் 18, 20 தேதிகளில் காவலர்கள் மற்றும் தேர்தல் பணியாளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b