Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 12 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வரும் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் முறையாக நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்ய அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முக்கியமான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தேர்தல் பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகின்றன, வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், வாக்காளர்களுக்கான வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், தேர்தல் காலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பது தொடர்பாகவும் அதிகாரிகளுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.
திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கரூர், சேலம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட தேர்தல் அலுவலர்கள், தேர்தல் பொதுப் பார்வையாளர்கள், செலவின பார்வையாளர்கள் மற்றும் போலீஸ் பார்வையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தேர்தல் பணிகள் அனைத்தும் சீராகவும் வெளிப்படையாகவும் நடைபெற வேண்டும் என்பதையே குறிக்கோளாக கொண்டு இந்த ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், வாக்குப்பதிவு நாளில் எந்தவித குறையும் இல்லாமல் தேர்தல் நடைபெற தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN