Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 12 ஏப்ரல் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டத்தில் தெற்கு காலங்கரை பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் உடல் நலக் குறைவு காரணமாக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு துணையாக அவரது மனைவி மருத்துவமனையில் தங்கி இருந்து வருகிறார். இந்த நிலையில், கூலித் தொழிலாளி அனுமதிக்கப்பட்டுள்ள அதே வார்டில் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் பணி புரியும் ஏட்டு ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் நள்ளிரவு பாதுகாப்பு பணியில் இருந்த அந்த ஏட்டு கூலி தொழிலாளியின் மனைவியிடம் செல்போன் சார்ஜர் இருக்கிறதா என்று கூறி பேச்சு கொடுத்ததாக கூறப்படுகிறது.
அப்போது, அந்த பெண் சார்ஜர் இல்லை என்று கூறியதாக தெரிகிறது.
அத்துடன், அந்த பெண்ணிடம் ஏட்டு அநாகரிகமாக பேசியதுடன், பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதை எதிர்பாராத அந்த பெண் போலீஸ் ஏட்டுவை கண்டித்துள்ளார்.
அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மீண்டும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர், இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என்று அந்த பெண்ணுக்கு போலீஸ் ஏட்டு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
பின்னர், இந்தச் சம்பவம் குறித்து கூலித் தொழிலாளியின் மனைவி தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், சம்பந்தப்பட்ட போலீஸ் ஏட்டுவை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், அவர், அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததை ஒப்புக்கொண்டார்.
இதை தொடர்ந்து, போலீஸ் ஏட்டு மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டுவின் பெயர் காவல்துறை தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை.
அரசு மருத்துவமனையில் சீருடையில் இருந்த போலீஸ் ஏட்டு பெண்ணிடம் பாலியல் ரீதியாக தொந்தரவில் ஈடுபட்டதும், அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதும் பொதுமக்கள் மற்றும் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN