Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 12 ஏப்ரல் (ஹி.ச.)
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும்.
குறிப்பாக கந்த சஷ்டி திருவிழா, தைப்பூசம், வைகாசி விசாக திருவிழா, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, மாசி திருவிழா உள்ளிட்ட விழாக்கள் வெகு விமர்சையாக நடைபெறும்.
தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் முருகப்பெருமானை தரிசனம் செய்ய வருவதால் இக்கோவில் எப்போதுமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும்.
அந்த வகையில் திருச்செந்தூர் கோவிலில் தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை திருநாளை முன்னிட்டு, நாளை மறுநாள் (ஏப்ரல் 14) சிறப்புப் பூஜைகள் நடைபெறவுள்ளன.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டு சித்திரை 1-ம் தேதியை முன்னிட்டு நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெறவுள்ளது.
பின்னர் காலை 8 மணிக்கு சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், சண்முகருக்கு அன்னாபிஷேகம், உச்சிகால தீபாராதனையும் நடைபெறவுள்ளது.
தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகிறது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, கோவில் கலையரங்கில் பொது விவரக்குறிப்பேடு வெளியிடுதல், பக்தி சொற்பொழிவு, பரத நாட்டியம் மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டும் அதற்கான சிறப்பு பூஜைகளில் கலந்து கொள்ளவும் வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் கோவில் நிர்வாகத்தினர் அதற்கான முன் ஏற்பாடுகளில் இறங்கியுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b