தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து - 12 பேர் படுகாயம்
மதுரா, 13 ஏப்ரல் (ஹி.ச.) டெல்லியில் இருந்து பீகார் நோக்கி 72 பயணிகளுடன் பயணித்த தனியார் பேருந்து, நேற்று இரவு யமுனா விரைவுச்சாலையில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் சுமார் 12 பயணிகள் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிட
12 Seriously Injured in Private Bus Accident After Vehicle Overturns on Road


மதுரா, 13 ஏப்ரல் (ஹி.ச.)

டெல்லியில் இருந்து பீகார் நோக்கி 72 பயணிகளுடன் பயணித்த தனியார் பேருந்து, நேற்று இரவு யமுனா விரைவுச்சாலையில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் சுமார் 12 பயணிகள் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிர்ஷ்டவசமாக இதுவரை உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை.

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா மாவட்டம், நௌஜீல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 76-வது மைல்கல் அருகே இரவு 9 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

பேருந்து அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நௌஜீல் போலீசார், உள்ளூர் மக்களின் உதவியுடன் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து உள்ளே சிக்கியிருந்த பயணிகளை வெளியேற்றினர். காயமடைந்த 12 பேரும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் நௌஜீல் சமூக சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

முதலுதவி சிகிச்சைக்குப் பின், பலத்த காயமடைந்த 5 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரா மாவட்ட அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

விபத்துக்கான சரியான காரணம் குறித்து நௌஜீல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிவேகம், ஓட்டுநரின் கவனக்குறைவு அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமா என்ற கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது. பேருந்தின் வேகக்கட்டுப்பாட்டு கருவி மற்றும் சிசிடிவி பதிவுகளையும் ஆய்வு செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

யமுனா விரைவுச்சாலையில் அதிவேகம் காரணமாக அடிக்கடி விபத்துகள் நேர்வதாகவும், வேகக் கட்டுப்பாட்டை கண்காணிக்க கூடுதல் நடவடிக்கை தேவை எனவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

165 கி.மீ நீளமுள்ள யமுனா விரைவுச்சாலை டெல்லி-ஆக்ராவை இணைக்கும் முக்கிய சாலையாகும்.அதிவேக சாலை என்பதால் இங்கு வாகனங்கள் 100 கி.மீ வேகத்திற்கு மேல் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

ஆனால், விதிகளை மீறும் வாகனங்களால் தொடர்ந்து விபத்துகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b